தூத்துக்குடியில் குறைந்த வட்டியில் கடன் தருவதாக மோசடியில் ஈடுபட்டவர் கைது
தூத்துக்குடியில் மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட கார்த்திக்.
தூத்துக்குடி மாவட்டம், குறுக்குச்சாலை ஏ. குமாரபுரம், மேற்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 34). இவர், தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்து வருகிறார். கடந்த 18.09.2022 அன்று இவருடைய செல்போன் எண்ணுக்கு பெங்களூருவில் இருக்கும் கிருஷ்ணா பைனான்ஸ் என்ற கம்பெனியில் இருந்து கடன் தருவதாக கூறி ஒரு மெசேஜ் வந்துள்ளது.
இதனையடுத்து அந்த மெசேஜ் வந்த செல்போன் எண்ணிற்கு ரமேஷ் தொடர்பு கொண்டபோது எதிர்முனையில் மகேஸ்வரி என்ற பெண் பேசியதாகவும், அவர் ரமேஷிடம் ஒரு சதவீத வட்டியில் 3 லட்சம் ரூபாய் கடன் தருவதாகவும் கூறி உள்ளார்.
மேலும், அதற்கான விண்ணப்ப படிவம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி மேற்படி ரமேஷிடமிருந்து பல்வேறு தேதிகளில் மொத்தம் 2,06,771 பணம் வாங்கிக் கொண்டு கடனும் தராமல் மோசடி செய்து உள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட ரமேஷ் National Cyber crime Reporting Portal மூலம் புகார் பதிவு செய்துள்ளார்.
ரமேஷ் அளித்த புகாரின் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உரிய விசாரணை மேற்கொள்ளும்படி, தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனுக்கு உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மேற்பார்வையில் சைபர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையிலான போலீஸார் தொழில் நுட்ப ரீதியாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீஸாரின் விசாரணையில், ரமேஷிடம் மோசடி செய்தது, ஏற்கெனவே தேனி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய மோசடி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட புதுடெல்லி, சரஸ்வதி விகார், ஜெ.ஜெ.காலனியைச் சேர்ந்த கார்த்திக் (36) என்பதும், அவர் தற்போது தேனி மாவட்ட சிறையில் இருப்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து சைபர் கிரைம் போலீஸார் கார்த்திக்கை கடந்த 09.03.2023 அன்று தேனி மாவட்ட சிறைச்சாலைக்கு சென்று சம்பிரதாய கைது செய்தனர். பின்னர், தூத்துக்குடி நான்காவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜப்படுத்தி காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.
கார்த்திக்கிடம் இருந்து ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டு மீண்டும் தூத்துக்குடி நான்காவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கார்த்திக்கை ஆஜர்படுத்திய போலீஸார், தேனி மாவட்ட சிறையில் அடைத்தனர். மேலும் இதுகுறித்து தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu