Cruz Fernandez Mani Mandapam தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்தீஸ் மணி மண்டபம்: முதல்வர் ஸ்டாலின் திறப்பு
துாத்துக்குடியில் முதல்வரால் வீடியோ கான்பிரன்சிங் மூலம் திறக்கப்பட்ட குரூஸ் பர்னாந்தீஸ் சிலை
Cruz Fernandez Mani Mandapam
தூத்துக்குடி மாநகர மக்களின் நலன் காத்திடும் வகையில் செயல்பட்ட ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் ஏறத்தாழ 30 ஆண்டு காலம் நகரமன்ற உறுப்பினராகவும், ஐந்து முறை நகரமன்றத் தலைவராகவும் இருந்த காலத்தில் ஜாதிமத பேதமின்றி மக்களின் அடிப்படைக் கல்வி மேம்பாடு, குடிசை வீடுகள் மேம்பாடு, தீண்டாமை எதிர்ப்பு, கூட்டுறவு வங்கிக் கடனுதவி, சுகாதார மையங்கள், சனிக்கிழமைச் சந்தை, அங்காடிகள், பொதுவான கல்லறைத் தோட்டம் என நல்லபல திட்டங்களைச் செயல்படுத்தி சாதனை படைத்தவர்.
குறிப்பாக, 1927ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் மிகக் கடுமையான குடிநீர் பஞ்சத்தில் சிக்கித் தவித்தபோது மிகுந்த தொலைநோக்குப் பார்வையுடன் நெல்லை தாமிரபரணி ஆற்றில் இருந்து குழாய் மூலம் நீர் கொண்டு வரும் திட்டத்தினைத் திறம்பட செயல்படுத்தி வெற்றி கண்டார்.
Cruz Fernandez Mani Mandapam
சென்னை தலைமைச்செயலகத்திலிருந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் திறந்து வைக்கும் முதல்வர் ஸ்டாலின்
ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் நினைவினைப் போற்றிடும் வகையில், அவரது பிறந்த நாளான நவம்பர் 15 அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸுக்கு நினைவு மணிமண்டபம் கட்டப்படும் என்றும், தூத்துக்குடி மாநகராட்சியில் குவிமாடத்துடன் கூடிய முழு உருவச் சிலை அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசால் 13.11.2021 அன்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பிற்கிணங்க, தூத்துக்குடி மாநகர மக்களின் தந்தை என்று அழைக்கப்படும் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸின் பிறந்த நாளான இன்று தூத்துக்குடி மாநகராட்சி பூங்காவில் 77 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள குவிமாடத்துடன் கூடிய அவரது திருவுருவச் சிலை மற்றும் மணி மண்டபத்தை காணொலிக் காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
Cruz Fernandez Mani Mandapam
துாத்துக்குடியில் நிகழ்ச்சியில் பங்கேற்ற எம்.பி. கனிமொழி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலெக்டர் லட்சுமிபதி உட்பட எம்எல்ஏக்கள்.
தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார், துணை மேயர் ஜெனிட்டா, ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸின் கொள்ளு பேத்தி ரமோலா வாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu