மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து விமர்சனம்: அமைச்சர் கீதாஜீவன் பதிலடி

மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து விமர்சனம்: அமைச்சர் கீதாஜீவன் பதிலடி

தூத்துக்குடியில் மகளிர் உரிமைத் தொகை விடுபட்ட நபர்கள் பதிவு செய்யும் முகாமை அமைச்சர் கீதாஜீவன் நேரில் ஆய்வு செய்தார்.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்குவது தொடர்பாக விமர்சனம் செய்த அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இப்போது முகத்தை எங்கு கொண்டு வைப்பார்கள் என அமைச்சர் கீதாஜீவன் கேள்வி எழுப்பினார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையெடுத்து, திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக அந்தத் திட்டம் குறித்த எந்த அறிவிப்பும் இல்லாத நிலை இரு்நதது.

இந்த நிலையில், பல்வேறு கட்ட பரிசீலனைக்குப் பிறகு கடந்த 15 ஆம் தேதி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் ஏறத்தாழ ஒரு கோடி பெண்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, குடும்பத் தலைவிகளுக்கான மாதம் ரூ. 1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பம் செய்து பணம் கிடைக்காதவர்கள் மீண்டும் தங்களது விண்ணப்பங்களை தாக்கல் செய்யலாம் என்றும் எந்த காரணத்துக்காக விடுபட்டது என ஆராயப்பட்டு தகுதி உள்ளோருக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்தது.

அதன்படி, தமிழகம் முழவதும் இன்று அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமை சமூக நலன், மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவது தொடர்பான குறைகளை சரிசெய்ய ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பதிவு செய்வதில் சர்வர் பிரச்சனை இருப்பதால் தாமதம் ஏற்பட்டு வருகிறது. விரைவில் சரிசெய்யப்படும்.

மகளிர் உரிமைத் தொகைக்கு செப்டம்பர் 30 ஆம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம். மகளிர் உரிமைத் தொகைக்கு பதிவு செய்வதற்காக இ-சேவை மையத்தில் இலவசமாக கட்டணமில்லாமல் பதிவு செய்து கொள்ளலாம். மகளிர் உரிமைத்துறை வழங்குவது தொடர்பாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தார்கள். ஆனால், தற்போது பணம் வரவு வைக்கப்பட்டு வருகிறது. விமர்சனம் செய்தவர்கள் இப்போது எங்குகொண்டு முகத்தை வைப்பார்கள் என்று தெரியவில்லை என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.

Tags

Next Story