தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழை: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி. (கோப்பு படம்).
தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. தற்போது, தூத்துக்குடி மாவட்டத்துக்கு சிவப்பு நிற எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகள் நிரம்பியதால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதற்கிடையே, தூத்துக்குடி கடல் பகுதியில் 45 கிலோமீட்டர் முதல் 60 கிலோ மீட்டர் வேகம் வரை பலத்த காற்று வீச கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக தூத்துக்குடியில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. அதனால், மீனவர்கள் தங்கள் படகுகளை மீன்பிடி துறைமுகங்களில் நிறுத்தி வைத்துள்ளனர்.
இதற்கிடையே, திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளுக்கு சுமார் 25000 கன அடி கொள்ளளவு நீர்வரத்து உள்ளது. உபரி நீர் வெளியேற்றப்படும் சூழல் உள்ளதால் தாமிரபரணி ஆற்றில் அதிகப்படியான மழை நீர் இன்று வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மற்றும் திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் படியும் எச்சரிக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (18.12.23) திங்கட்கிழமை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் காரணத்தினாலும் கன மழை எச்சரிக்கை உள்ளதாலும் பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் அனைத்து வகை கல்வி நிலையங்களுக்கும் நாளை (18.12.2023) ஒரு நாள் விடுமுறை விடப்படுகிறது. உயர்கல்வி வகுப்புகளுக்கு நடைபெறவிருக்கும் தேர்வுகள் மற்றொரு நாளில் நடைபெறும். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu