இரட்டை ரயில் பாதை பணிகள்: தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

இரட்டை ரயில் பாதை பணிகள்: தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு
X

தூத்துக்குடியில் தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சௌத்ரி ஆய்வு மேற்கொண்டார்.

இரட்டை ரயில் பாதை பணிகள் குறித்து தூத்துக்குடியில் தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சௌத்ரி ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி- மதுரை இடையே உள்ள இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில் தூத்துக்குடி மீளவிட்டான் ரயில் நிலையம் முதல் தூத்துக்குடி ரயில் நிலையம் வரை சுமார் 7.6 கிலோ மீட்டர் தூரம் இரட்டை ரயில் பாதை பணிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த இரட்டை ரயில் பாதை பணிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து பல்வேறு கட்ட சோதனைகள் நடத்தப்பட்டன. மேலும், ரயில் பாதை பாதுகாப்பு குறித்து தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சௌத்ரி ஆய்வு செய்வதற்காக இன்று மீளவிட்டான் ரயில் நிலையம் வந்தார்.

முன்னதாக மீளவிட்டான் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் எத்தனை ரயில்கள் இந்த ரயில் பாதை வழியாக இயக்கப்படுகிறது என்பது குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரட்டை ரயில் பாதை பணிகளின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக பாதுகாப்பு ஆணையர் சௌத்ரி, மதுரை மண்டல பொது மேலாளர் ஆனந்த் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட ரயில்வே துறை அதிகாரிகள் ஆய்வு செய்வதற்கான ட்ராலிகள் மூலம் ரயில்வே தண்டவாளத்தில் சென்று ஆய்வு செய்தனர்.

காலையில் தொடங்கிய ஆய்வு பிற்பகலில் நிறைவு பெற்றது. அதன் பிறகு தட்டப்பாறை முதல் தூத்துக்குடி ரயில் நிலையம் வரை அதிவேக மின்சார ரயில் இயக்கப்பட்டு சோதனை நடைபெற்றது.

தூத்துக்குடி-மதுரை இடையே இரட்டை ரயில்வே பாதை அமைக்கும் பணிகள் விரைவில் நிறைவு பெறும் என்றும் பணிகள் முடிந்த பிறகு சோதனை ஓட்டம் நடைபெற்று ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!