தூத்துக்குடி- மாலத்தீவு இடையே நேரடி கப்பல் போக்குவரத்து சேவை தொடக்கம்
தூத்துக்குடி துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சரக்கு கப்பல் சேவையை மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாகூர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மாலத்தீவு நாட்டிற்கு பயணம் மேற்க்கொன்ட போது அளித்த உறுதிமொழியை தொடர்ந்து, தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து மாலத்தீவு நாட்டிற்கு நேரடி சரக்கு கப்பல் சேவை இன்று துவக்கி வைக்கப்பட்டது.
இந்தக் கப்பல் சேவையை மத்திய கப்பல் துறைமுகம் மற்றும் நீர்வழி போக்குவரத்து இணை அமைச்சர் சாந்தனு தாகூர் கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணையத் தலைவர் ராமச்சந்திரன், இந்திய துறைமுக கழகத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கேப்டன் தியாகி, தூத்துக்குடி துறைமுக அதிகார ஆணையக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தற்போது தொடங்கப்பட்டுள்ள சேவை கலேனா என்ற சரக்கு கப்பல் மூலம் இந்திய கப்பல் கழகம் சார்பில் மாதத்திற்கு மூன்று முறை இயக்கப்பட உள்ளது. குறைந்த செலவில் சரக்குகளை நேரடியாக இந்தியாவில் இருந்து மாலத்தீவிற்கு எடுத்துச் செல்ல முடியும்.
இந்த கப்பல் சேவை மூலம் மாலத்தீவு நாட்டிற்கு சுமார் 200க்கும் மேற்பட்ட கண்டெய்னர்களில் குறைந்த செலவில் பெட்டிகளில் உரம், கட்டுமான பொருட்கள், காய்கறிகள் பழங்கள், தளவாடப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அனுப்பப்பட்டன.
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுள்ள கப்பல் மே 7 ஆம் தேதி மாலத்தீவு நாட்டில் உள்ள மாலே துறைமுகத்தை சென்று அடையும். இதன் மூலம் இந்தியாவிற்கும் மாலத்தீவுக்கும் இடையேயான வர்த்தகம் 323.9 மில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது என தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணைய நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் பங்கேற்ற மத்திய கப்பல் துறைமுகம் மற்றும் நீர்வழி போக்குவரத்து துறை இணை அமைச்சர் சாந்தனு தாகூர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் தேர்தலில் மக்கள் பாரதிய ஜனதா கட்சி பக்கம் உள்ளனர். பாரதிய ஜனதா கட்சி கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெரும். காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தற்போதைய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் நரேந்திர மோடியை தாக்கி பேசி வருகின்றனர்.
இதன் காரணமாக மக்கள் மாற மாட்டார்கள். மக்கள் பாரதிய ஜனதா கட்சியை விரும்புகிறார்கள், ஆதரிக்கிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த எட்டு ஆண்டுகளில் 65 ஆண்டுகள் காங்கிரஸ் செய்யாத பல்வேறு மலை போன்ற சாதனைகளை செய்துள்ளது.
இந்த சாதனை 2030 வரை தொடரும். இந்தியா முழுவதும் பல்வேறு திட்டங்களை கப்பல் துறை மட்டுமல்லாது பல்வேறு துறை மூலம் மக்களுக்கு செயல்படுத்தி வருகிறோம். எனவே, கர்நாடக சட்டமன்றத் தேர்தல் உள்ளிட்ட தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறும் என அமைச்சர் சாந்தனு தாகூர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu