தூத்துக்குடி மாவட்ட ஓய்வூதியர்களுக்கு ஆட்சியர் செந்தில்ராஜ் முக்கிய அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ். (கோப்பு படம்).
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள ஓய்வூதியர்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் பணியில் இருக்கும்போது மரணமடைந்தவர்கள் ஆகியோரது ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வு கால பலன்கள் பெறுவதில் ஏற்படுகின்ற குறைகளை நேரடியாக கேட்டறிந்து அவர்களின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றும் வகையில் 'ஓய்வூதியதாரர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்" அடிக்கடி நடத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அக்டோபர் 18 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் சென்னை, ஓய்வூதிய இயக்குநர் அவர்களால் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. எனவே, மாநில அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் அவர்களது ஓய்வூதியம் தொடர்பான குறைகளை தெரிவிக்கலாம்.
கடைசியாக பணிபுரிந்து ஓய்வுபெற்ற பதவி மற்றும் அலுவலகத்தின் பெயர், ஓய்வு பெற்ற நாள், ஓய்வூதிய கொடுப்பாணை எண், ஓய்வூதியம் பெற்றுவரும் கருவூலத்தின் பெயர், வீட்டு முகவரி, தொலைபேசி எண், செல்போன் எண், கோரிக்கை விபரம் மற்றும் கோரிக்கை எந்த அலுவலரிடம் நிலுவையிலுள்ளது? என்பது போன்ற விபரங்களுடன் செப்டம்பர் 22 ஆம் தேதிக்குள் 'மாவட்ட ஆட்சியர், கோரம்பள்ளம், தூத்துக்குடி-628 101" என்ற முகவரிக்கு வந்து சேரும்படி “இரண்டு பிரதிகளில்”; விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும்.
22.09.2023-க்குப் பின்னர் பெறப்படும் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேலும், விண்ணப்பித்த ஓய்வூதியதாரர்கள் 18.10.2023 அன்று காலை 10.30 மணிக்கு நடத்தப்படும் ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu