தூத்துக்குடியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கடலோர பாதுகாப்பு ஒத்திகை

தூத்துக்குடியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கடலோர பாதுகாப்பு ஒத்திகை
X

தூத்துக்குடி பழைய துறைமுகம் பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

மும்பையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தீவிரவாதிகள் கடல் வழியாக ஊடுருவி தாக்குதல் நடத்தியதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து, கடல் வழியை பாதுகாக்கும் வகையில் ஆண்டுக்கு இரண்டு முறை கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

அதாவது, தீவிரவாதிகள் வேடத்தில் இருக்கும் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் சிலர் மாறுவேடத்தில் கடல் வழியாக நிலப்பரப்பில் ஊடுருவது போன்றும் அவர்களை போலீசார் கண்காணித்து கைது செய்வது போலவும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்படுவது உண்டு.

அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் தீவிரவாதிகள் கடற்பகுதி மூலமாக மாவட்டத்திற்குள் அத்துமீறி நுழைவதை தடுக்கும் பொருட்டும், கடல்வழி மற்றும் கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாகவும் அனைத்து பாதுகாப்பு துறைகளையும் ஒன்றிணைத்து பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதில் பாதுகாப்பு படை வீரர்கள், போலீசார் தீவீரவாதிகள் போன்று வேடம் அணிந்து முக்கிய இடங்களில் ஊடுருவ முயற்சி செய்வதும், அவர்களை அனைத்து பாதுகாப்பு துறையினரும் ஒன்றிணைந்து தடுத்து நிறுத்தி கைது செய்வது போன்றும் ஒத்திகை நடைபெற்றது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றும், நாளையும் என இரண்டு நாட்கள் நடைபெறும் ‘சாகர் காவாச்” என்ற பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் இன்று தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி பழைய துறைமுகம் பகுதியில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, தூத்துக்குடி கடலோர காவல்படை காவல் துணை கண்காணிப்பாளர் பிரதாபன் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு