காவிரி தண்ணீர் விவகாரத்தில் உடனடியாக பேசி தீர்வு காண வேண்டும்: ஆளுநர் தமிழிசை பேட்டி
தூத்துக்குடி விமான நிலையத்தில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டியளித்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் போலீசார் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். மேலும், பாஜக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் பூச்செண்டு கொடுத்தும், புத்தகம் கொடுத்தும் வரவேற்றனர்.
அதைத் தொடர்ந்து ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அரசியலில் பல கனவுகளுடன் வந்து இறங்கிய திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இன்று நடைபெறும் வந்தே பாரத் ரயில் துவக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்துள்ளேன். நம் நாடு பல முன்னேற்றங்களை பார்த்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி ஒன்பது ஆண்டுகாலமாக எதையும் செய்யவில்லை என்று சிலர் சொல்லிக் கொண்டி இருக்கின்றனர்.
தென் தமிழகத்தில் குறிப்பாக சபாநாயகர் அப்பாவு தொகுதியில் கடும் குடிநீர் பிரச்சினை நிலவுகிறது. மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டங்களை செயல்படுத்தி மாநில அரசு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும். இதனை அரசியலாக்க கூடாது. ஜல்ஜீவன் திட்டத்தை செயல்படுத்தி இருந்தால் குடிநீர் பிரச்னை ஏற்பட்டு இருக்காது. பெண்ணாக இருக்கும் அனைவரும் மகளிர் இட ஒதுக்கீட்டை வரவேற்க வேண்டும். இதில், விமர்சனத்தை பிறகு பார்க்கலாம்.
காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சி காலத்தில் கொண்டு வரப்படாத மகளிர் இட ஒதுக்கீடு தற்போது கொண்டுவரப்பட்டு உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 13 பெண் எம்.பி.க்கள் மற்றும் 77 பெண் எம்எல்ஏக்கள் உருவாக வாய்ப்புள்ளது. இந்தியா பொருளாதாரத்தில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. சிஏஜி அறிக்கைக்கு பிரதமர் பதில் சொல்வார்.
பிரதமர் மோடி ஊழல் இல்லாத ஆட்சியை நடத்தி வருகிறார் என்று உலகமே கூறி வருகிறது. காவிரி நீர் பிரச்னை விவகாரத்தில் கர்நாடகா தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். இவர்கள் வரும் என்பார்கள் ஆனால் வராது. அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கிறார்கள் என்பதால் காவிரி தண்ணீர் பிரச்னையில் உடனடியாக பேசி தீர்வு காண வேண்டும். ஆனால் தீர்வு காண மறுத்து வருகிறார்கள் என ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu