தூத்துக்குடி அருகே தொழிலதிபரை கொன்று உடல் எரிப்பு: 4 பேர் கைது

தூத்துக்குடி அருகே தொழிலதிபரை கொன்று உடல் எரிப்பு: 4 பேர் கைது
X

கொலை செய்யப்பட்ட தொழிலதிபர் நாகஜோதி. (கோப்பு படம்)

தூத்துக்குடி அருகே தொழிலதிபரை கொலை செய்து, சடலத்தை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த சம்பவம் தொடர்பாக கார் ஓட்டுநர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் கலைஞானபுரம் காட்டுப் பகுதியில் கார் ஒன்று நள்ளிரவு நேரத்தில் எரிந்து கொண்டு இருப்பதை கண்டு அந்த வழியாக சென்றவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்தப் பகுதிக்கு விரைந்து சென்ற விளாத்திகுளம் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் காரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க முயன்றனர்.

அப்போது, அந்த காரின் டிக்கியில் ஆண் சடலம் ஒன்று எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைத்த போலீசார் சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் மற்றும் தடவியல் நிபுணர்களை வரவழைத்து ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும், காரின் அருகே கிடந்த செல்போனை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர். 75 சதவீதம் எரிந்த நிலையில் கிடந்த சடலத்தை தடயவியல் துறை உதவி இயக்குநர் கலா லட்சுமி தலைமையிலான நிபுணர்கள், சம்பவ இடத்தில் வைத்தே பரிசோதனைகள் நடத்தினர்.

இறந்தவர் கழுத்தில் கயிற்றால் இறுக்கி கொலை செய்யப்பட்டிருப்பதற்கான முக்கிய தடயங்கள் அறிகுறிகள் காணப்பட்டதை அவர்கள் சேகரித்தனர். இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நள்ளிரவில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

காரின் பதிவெண்ணை கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த நாகஜோதி (48) என்பவருக்கு சொந்தமான கார் என்பதும், பைனான்சியர் தொழிலில் ஈடுபட்டு வந்த நாகஜோதியிடம் கார் ஓட்டுநராக இருந்து வந்த கன்னிராஜபுரத்தை சேர்ந்த மைக்கேல் ராஜ் (27) என்பவர் ரூபாய் 2 லட்சம் கடன் வாங்கியதாகவும் தெரியவந்தது.

இதற்கிடையே, கொலையானது நாகஜோதி என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையெடுத்து, நாகஜோதியை கொலை செய்ததாக அவரது கார் ஓட்டுநர் மைக்கேல்ராஜ், அவரது சகோதரர் குழந்தை கனி, மாரீஸ், கணபதி ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில், நாகஜோதியிடம் மைக்கல்ராஜ் வாங்கிய இரண்டு லட்சம் ரூபாய் கடனுக்கு சாயல்குடியைச் சேர்ந்த மாரீஸ் (28) ஜாமீன் கையெழுத்து போட்டு இருந்ததும், மைக்கேல்ராஜ் வாங்கி பணத்தை திரும்ப கொடுக்க முடியாமல் போனதால் கடந்த 6 ஆம் தேதியன்று ஜாமீன் கையெழுத்து போட்ட மாரீஸை நாகஜோதி சிறை பிடித்து வைத்து இருந்ததும் தெரியவந்தது.

இதனால், கடன் வாங்கிய மைக்கேல்ராஜ், அவரது சகோதரர் குழந்தை கனி (26), ஜாமீன் கையெழுத்து போட்ட மைக்கேல்ராஜ் என்ற மாரீஸ் மற்றும் அவர்களது கூட்டாளி கன்னிராஜபுரத்தைச் சேர்ந்த கணபதி (29) ஆகிய நான்கு பேரும் சேர்ந்து தொழிலதிபர் நாகஜோதியை கொலை செய்தி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பின்னர், நாகஜோதியின் சடலத்துடன் குளத்தூர் கிழக்கு கடற்கரை சாலை கலைஞானபுரம் காட்டுப்பகுதிக்கு காரில் சென்று, அங்கு காரை நிறுத்தி பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டு தப்பி தலைமறைவாகிவிட்டதாகவும், அதன் பின்னர் நான்கு பேரும் கைது செய்யப்பட்டு விளாத்திகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைக்கப்பட்தாகவும் குளத்தூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Next Story
ai solutions for small business