மலேசியாவில் வர்த்தக மாநாடு: தூத்துக்குடி தொழிலதிபர்கள் பங்கேற்க அழைப்பு
தூத்துக்குடியில் நடைபெற்ற கூட்டத்தில் தி ரைஸ் அமைப்பு நிறுவனர் ஜெகத் கஸ்பர் பேசினார்.
தி ரைஸ் அமைப்பு சார்பில், மலேசியாவில் ஜூலை 28 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை தொழிலதிபர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு குறித்த முன் சந்திப்பு விளக்கக் கூட்டம் தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு, வர்த்தக சங்கத் தலைவர் தமிழரசு தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் சங்கர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். இந்தக் கூட்டத்தில் சங்க செயற்குழு மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், சிறப்பு விருந்தினராக “தி ரைஸ்” (The Rise) அமைப்பின் நிறுவனர் ஜெகத் கஸ்பர், பெரிஸ் மகேந்திரவேல் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இந்தக் கூட்டத்தில் ஜெகத் கஸ்பர் பேசியதாவது:-
நம்மை நாம் தான் உயர்த்திக் கொள்ள வேண்டும். அறிவுத் திறனும், பொருளாதார ஆற்றல் மட்டும் தான் உலக அரங்கில் ஒரு மதிப்பை பெற்றுத் தரும். இந்த இரண்டும் சேர்ந்து இயங்கக் கூடிய காலமாகத் தான் இந்தக் காலத்தை சொல்லலாம். இக்காலத்தில் மைக்ரோ லெவல் ஒரு தேவையாக இருக்கிறது.
கனடா, அமெரிக்கா,ஆப்பிரிக்கா, சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இதுபோன்ற ஒரு ஒத்துழைப்பு இயக்கம் நடைபெறுகிறது. அந்த ஒத்துழைப்பினை உருவாக்குவது தான் “தி ரைஸ்” (The Rise) அமைப்பின் முக்கிய நோக்கம் ஆகும்.
“தி ரைஸ்” (The Rise) அமைப்பில் உலகளாவிய மன்றம், பொறியியல் மன்றம், உலக தமிழ் வழக்கறிஞர்கள் மன்றம் தகவல் தொழில் நுட்ப தொழில் முனைவோர் மன்றம், தொழில் வல்லுநர்கள் மன்றம் ஆகியோர் கலந்து கொள்ளலாம். உலக தமிழ் தொழிலதிபர்கள் - திறனாளர்கள் மாநாடு மலேசியாவில் ஜூலை 28,29,30 ஆகிய தினங்களில் நடைபெறுகிறது. எல்லா தொழில்துறையினருக்கும் நல்ல வாய்ப்பாக அமைகிறது.
இந்த மாநாட்டில் குறிப்பாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்களுக்கு நல்ல ஒரு வாய்ப்பாகவும் அமைகிறது. Man Power Supply செய்பவர்களும், கான்ட்ராக்டர்களும் இதில் கலந்து கொண்டு பயன்பெறுகின்றனர். இந்த மாநாட்டில் முதலீட்டாளர்கள் பெரும்பான்மையோர் பங்கு கொள்கின்றனர்.
இந்தியாவில் இருந்து இதுவரை 180 பேர் பதிவு செய்துள்ளனர். பல்வேறு விதமான நாடுகளிலிருந்து தலைவர்கள் பலர் வருகை தர உள்ளார்கள். இதனுடைய அடுத்த கட்டம் அடுத்த ஆண்டு மே மாதம் 24, 25, 26-இல் World Economic Hall-ல் வைத்து உலகத்தின் மிகப் பெரிய தலைவர்கள், உலகத்தின் பொருளாதார தலைவிதியை தீர்மானிக்க கூடிய 500 கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளார்கள்.
மலேசியா மாநாடு ஆசியாவிலேயே நடைபெறுகின்ற நம்பர் 1 வர்த்தக கண்காட்சி மையமாகும். இதன் நோக்கம் நாம் உலகத்தில் மதிக்கத்தக்க ஒரு மக்களாக எழ வேண்டும். உலகளாவிய சமூகம் ஒழுங்கமைக்கப்பட்டு மற்றும் மரியாதையுடன் திகழ வேண்டும்.
தூத்துக்குடியில் இருந்து இந்த மாநாட்டில் முதலீட்டர்கள் மற்றும் தொழில்முனைவோர் அனைவரும் இதில் கட்டாயம் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும். தூத்துக்குடி மாநகரம் ஒரு முக்கியமான தலைநகரமாகும். எளவே நீங்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டு பயன் பெற கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெகத் கஸ்பர் பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu