தூத்துக்குடியில் ரூ.57 கோடியில் கட்டப்பட்ட பேருந்து நிலையம் அக்.8ல் திறப்பு
தூத்துக்குடியில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடியில் இயங்கி வந்த அண்ணா பழைய பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ. 57 கோடியில் நான்கு தளங்களுடன் கட்டப்பட்டு உள்ளது. மேலும், தூத்துக்குடி அம்பேத்கர்நகரில் ரூ. 29 கோடியில் ஸ்டெம் பார்க் புதிதாக கட்டப்பட்டு உள்ளது.
இந்நிலையில், பேருந்து நிலையம் மற்றும் ஸ்டெம் பார்க் ஆகியவற்றை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நேரு அக்டோபர் 8 ஆம் தேதி திறந்து வைக்கிறார். இதுகுறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி பேருந்து நிலையம், ஸ்டெம் பார்க் ஆகியவை அக்டோபர் 8 ஆம் தேதி மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்க்கப்படவும், ரூ. 87 கோடி மதிப்பில் பல்வேறு கழிவுநீர் கால்வாய் பணிகள் துவக்கி வைக்கப்படவும் உள்ளது. இதேபோல மீன்வளத்துறை சார்பில் ரூ. 9 கோடி மதிப்பில் மீன் ஏலக்கூடமும், பொதுப்பணித்துறை சார்பில் கழுகுமலை எட்டையபுரத்தில் ரூ. 5.63 கோடி மதிப்பில் சார் பதிவாளர் கட்டிடத்திற்கும் அடிக்கல் நாட்டப்பட இருக்கிறது.
மேலும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 2.75 கோடி மதிப்பில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, சமுதாயநலக் கூடம் ஆகிய பணிகள் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
அக்டோபர் 8 ஆம் தேதி காலை 10 மணி அளவில் தூத்துக்குடி அண்ணா பழைய பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் திமுக முதன்மைச் செயலாளரும், நகர்ப்புற வள்ர்ச்சித்துறை அமைச்சருமான நேரு, திமுக துணைப் பொதுச் செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.
அன்றைய தினம் மதியம் 1 மணி அளவில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவில்பட்டி சத்தியபாமா திருமண மண்டபத்தில் வைத்து கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஏழைய – எளிய பெண்கள் 125 பேருக்கு ரூ. 10 லட்சம் மதிப்பில் தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
எனவே, அனைத்து நிகழ்ச்சிகளிலும் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இதற்கிடையே, பணிகள் முடிவு பெற்ற அண்ணா பேருந்து நிலையம், ஸ்டெம் பார்க் ஆகியவற்றை அமைச்சர் கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu