தூத்துக்குடியில் புத்தக திருவிழா: இளம் தலைமுறையினர் பங்கேற்க கனிமொழி அழைப்பு
தூத்துக்குடியில் புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்து கனிமொழி எம்.பி. பார்வையிட்டார்.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) ஆகியவை இணைந்து நடத்தும் நான்காவது புத்தகத் திருவிழா தூத்துக்குடி சங்கரப்பேரி விலக்கு திடலில் இன்று தொடங்கியது. புத்தகத் திருவிழாவை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி திறந்து வைத்து பார்வையிட்டார்.
தொடர்ந்து கனிமொழி எம்.பி. கூறியதாவது:-
தூத்துக்குடியில் நான்காவது புத்தகத் திருவிழா இன்று தொடங்கி இருக்கிறது. புத்தகத் திருவிழாவில் 110 புத்தக பதிப்பகத்தினர் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை வைத்து உள்ளனர். புத்தகத் திருவிழாவிற்கு மக்கள், மாணவர்கள் ஆதரவு தேவை. வாசிப்பு பழக்கம் பரவலாக பரவலாகத்தான் ஒரு சமூகம் விழித்திருக்கக்கூடிய சமூகமாக, தன்னை உணர்ந்திருக்கக்கூடிய சமூகமாக மாற முடியும். நம்முடைய நாட்டை வளர்தெடுத்திருக்கக் கூடிய தலைவர்கள் எல்லோருமே சிந்தனையாளர்களாக, வாசிப்பு பழக்கம் உள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள்.
எனவே புத்தகத் திருவிழாவில் இளம் தலைமுறையினர் அதிகளவில் கலந்துகொண்டு புத்தகங்கள் வாங்கி படிக்க வேண்டும் என கனிமொழி எம்.பி. கேட்டுக் கொண்டார்.
புத்தகத் திருவிழாவில், ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய இடங்களில் நடைபெறும் அகழ்வாராய்ச்சிகளை புரிந்துக்கொள்ளக்கூடிய வகையில் தமிழ்நாடு அரசில் தொல்லியல் துறை சார்பில் ஒரு அரங்கம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடத்தில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் மற்றும் பொக்கிஷங்கள் மாணவர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் புத்தகத் திருவிழாவில் முதன் முறையாக தூத்துக்குடியைப் பற்றிய புகைப்படக் கண்காட்சி மற்றும் தூத்துக்குடியின் பெருமையை சொல்லக்கூடிய புகைப்படப் போட்டியும் நடத்தப்பட்டு இருக்கிறது. இங்குள்ள புகைப்படக் கலைஞர்கள் எடுத்த சிறந்த 60 புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட உள்ளது. இறுதி சுற்றில் புகைப்படங்களை திரைப்பட இயக்குநர் ராஜீவ் மேனன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட இருக்கிறது.
புத்தகத் திருவிழாவில், 28 ஆம் தேதி முதல் மே 1 ஆம் தேதி வரை நடைபெறும் நெய்தல் திருவிழாவில் மண் சார்ந்த கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. மேலும் உணவுத் திருவிழாவும் நடைபெறுகிறது. இதற்கிடையே, புத்தகத் திருவிழாவில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த பொருநை அரங்கினை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.
மேலும், பள்ளி கல்வித்துறை சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்த 20 மாணவ, மாணவிகளுக்கு காமராஜர் விருது மற்றும் பாராட்டு சான்றிதழ்கள், 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.10,000-க்கான காசோலை மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.20,000-க்கான காசோலை ஆகியவற்றை கனிமொழி வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நகர்மன்ற உறுப்பினர் சந்திப்பு
தூத்துக்குடியில் இன்று தொடங்கிய புத்தகத் திருவிழாவில் கொடைக்கானலில் இருந்து குடும்பத்துடன் வந்த தி.மு.க.வை சேர்ந்த இளம் வயது நகர்மன்ற உறுப்பினர் ஜீவா பிரபா கலந்து கொண்டு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியை சந்தித்தார்.
இளம் தலைமுறையினர் புத்தகத் திருவிழாவில் அதிகளவு பங்கேற்க வேண்டும் என்று நகர்மன்ற உறுப்பினரும், வழக்கறிஞருமான ஜீவா பிரபாவுக்கு கனிமொழி பாராட்டு தெரிவித்து அவருடன் செல்பி எடுத்துக் கொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu