தூத்துக்குடியில் பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா வீடு, கார் மீது தாக்குதல்…

சசிகலா புஷ்பா வீட்டில் உடைக்கப்பட்ட பிளாஸ்டிக் சேர்கள்.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவராக உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சசிகலா புஷ்பா அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது உண்டு. இந்த நிலையில், தூத்துக்குடியில் பாஜக சிறுபான்மையினர் பிரிவு சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் அமைச்சர் கீதாஜீவன் குறித்து அவதூறாக பேசினார்.
அந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், தூத்துக்குடி தபால் தந்தி காலனி 8 ஆவது தெருவில் உள்ள சசிகலா புஷ்பாவின் வீடு மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதனால், தூத்துக்குடி மாவட்டத்தில் பதட்டம் நிலவி வருகிறது. ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சசிகலா புஷ்பா சர்ச்சை பேச்சு:
தூத்துக்குடியில், பாஜக தெற்கு மாவட்ட சிறுபான்மை அணி சார்பில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தனியார் மண்டபத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இதில், பாஜக சட்ட மன்ற குழு தலைவரான நயினார் நாகேந்திரன், மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா, மாநில பொதுச் செயலாளர் பொன் பால கணபதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இந்த நிகழ்ச்சியில், சசிகலா புஷ்பா பேசும்போது:
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 24 மணி நேரமும் உழைத்து கொண்டிருக்கிறார். மக்களுக்காக உழைக்கும் அவரை பற்றி பேச யாருக்கும் தகுதி இல்லை. அண்ணாமலை மேடையில் ஏறும் போது நாங்கள் மேடையில் ஏறுவோம் என திமுக பொது கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசி உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்து வெளியே வரும் போது கால் இருக்காது. நாக்கு இருக்காது என ஆவேசமாக பேசினார்
வீடு, கார் மீது தாக்குதல்:
இந்த நிலையில், தூத்துக்குடி தபால் தந்தி காலனி 8 ஆவது தெருவில் உள்ள சசிகலா புஷ்பா வீட்டில் யாரும் இல்லாதபோது, அவரது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த காரின் கண்ணாடியை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்து உள்ளனர். மேலும், வீட்டு ஜன்னல் கண்ணாடிகள், அங்கிருந்த சேர்கள், பூந்தொட்டிகள், தண்ணீர் தொட்டி ஆகியவற்றையும் அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.
இந்த சம்பவம் நிகழ்ந்தபோது சசிகலா புஷ்பா வெளியூரில் இருந்துள்ளார். அவரது வீடு மற்றும் கார் மீது தாக்குதல் நடைபெற்ற சம்பவம் பரவியதும் பாஜக நிர்வாகிகள் பலர் வீட்டின் முன்பு திரண்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் தலைமையிலான போலீஸார் பாஜக நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்த தூத்துக்குடி சிப்காட் போலீஸார் சசிகலா புஷ்பா வீடு மற்றும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பாஜக எச்சரிக்கை:
இதற்கிடையே, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் தலைமையிலான பாஜக நிர்வாகிகள், வழக்கறிஞர் அணியினர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் சசிகலா புஷ்பா வீடு முன்பு திரண்டனர். தொடர்ந்து, அவர்கள் தூத்துக்குடி - பாளையங்கோட்டை சாலையில் 3 ஆவது மைல் பகுதியில் மறியலில் ஈடுபட முயன்றனர்.
தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் கூறியதைத் தொடர்ந்து, சாலை மறியலை கைவிட்டு, சிறிது நேரம் அங்கு அமைச்சர் கீதாஜீவனுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியபடி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாஜகவினரின் விமர்சனங்களை பொறுத்து கொள்ள முடியாத திமுகவைச் சேர்ந்த குண்டர்கள் பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பாவின் வீடு மற்றும் கார் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தி சென்றுள்ளனர். இதில் சம்மந்தபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎஸ்பி எங்களிடம் தெரிவித்துள்ளார்.
நாளை ( 23.12.2022 ) காலை 8 மணிக்குள் சம்மந்தபட்டவர்களை கைது செய்யாவிட்டால், இரண்டாயிரம் பாஜக தொண்டர்களோடு அமைச்சர் கீதா ஜீவன் வீட்டை முற்றுகையிடுவோம் என எச்சரிக்கை விடுகிறோம் என்று சித்ராங்கதன் தெரிவித்தார்.
திமுக கவுன்சிலர்கள் மீது புகார்:
சசிகலா புஷ்பா வீடு மற்றும் கார் மீது தாக்குதல் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக, பாஜக பிரசாரப் பிரிவு மாவட்ட செயலாளர் ரத்தினராஜ் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், தூத்துக்குடி டூவிபுரத்தைச் சேர்ந்த திமுக பகுதிச் செயலாளர் ரவீந்திரன், கவுன்சிலரான அவரது மனைவி, தூத்துக்குடி லெவிஞ்சிபுரத்தைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் ராமகிருஷ்ணன், தபால் தந்தி காலனியைச் சேர்ந்த திமுக இசக்கிராஜா ஆகியோரும், அவர்களது ஆட்களும் இரண்டு ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்களில் வந்து வீடு மற்றும் காரை சேதப்படுத்தி உள்ளனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu