தூத்துக்குடியில் சலூன் கடையுடன் நூலகம் நடத்துபவருக்கு அண்ணாமலை உதவி

தூத்துக்குடியில் சலூன் கடையுடன் நூலகம் நடத்துபவருக்கு  அண்ணாமலை உதவி
X

தூத்துக்குடியில் சலூன் கடையுடன் நூலகம் நடத்திவரும் பொன் மாரியப்பனிடம் நிதியுதவியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வழங்கினார்.

தூத்துக்குடியில் மக்களிடம் வாசிப்பு தன்மையை அதிகரிக்க வேண்டி சலூன் கடையுடன் நூலகம் நடத்தி வருபவரை சந்தித்துப் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நிதியுதவி வழங்கினார்.

என் மண் என் மக்கள் என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று தூத்துக்குடியில் பிரசாரம் மேற்கொண்டார். சிறிது தூரம் நடத்து சென்று பொதுமக்களை சந்தித்து பேசிய அண்ணாமலை பாதயாத்திரை நிகழ்ச்சிக்கு பின்னர் மில்லர்புரம் பகுதிக்கு சென்றார்.

பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியில் சமீபத்தில் பங்கேற்ற தூத்துக்குடி மில்லர்புரத்தில் சலூன் கடையுடன் நூலகம் நடத்தி வரும் பொன்மாரியப்பனின் முடிந்திருத்தும் கடையினை நேரில் சென்று பார்வையிட்டு அவரிடம் எப்படி இந்த ஆர்வம் உங்களுக்கு வந்தது என்று அண்ணாமலை கேட்டறிந்தார்.

அதற்கு அந்த சலூன் கடையின் உரிமையாளர் பொன் மாரியப்பன், தனக்கு படிக்க வேண்டும் என்ற ஆசை நிறைய இருந்தது ஆனால் என்னால் படிக்க முடியவில்லை. அதனால் என் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் வாசிப்பு தன்மையை அதிகரிக்கவும் தனது கடையில் புத்தகங்களை வாங்கி வைத்துள்ளதாக தெரிவித்தார்.

அதனைக் கேட்டதும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் தனது வீட்டில் இருக்ககூடிய 100 புத்தகங்களை சலூன் கடையில் வைக்க தருவதாக தெரிவித்தார். விரைவில் புத்தகங்களை சென்னையில் இருந்து அனுப்பி வைப்பதாகவும் அண்ணாமலை உறுதி அளித்தார்.

மேலும், கிடைக்கும் வருமானத்தில் பணத்தை எல்லாம் புத்தகங்கள் வாங்கி செலவிட்டதால் முடி திருத்தம் செய்வதற்கான சேர் வாங்க போதிய வசதி இல்லை என சலூன் கடை உரிமையாளர் பொன் மாரியப்பன் அண்ணாமலையிடம் ஒரு கோரிக்கை வைத்தார்.

அதனைக் கேட்டதும், உடனடியாக முடி திருத்தம் செய்வதற்கு தேவையான சேர் வாங்குவதற்கான பண உதவியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பொன் மாரியப்பனுக்கு வழங்கினார். நிகழ்ச்சியின்போது, பாஜக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்