வெள்ளம் பாதித்த பகுதிகளில் அடிப்படை வசதிகள்: அதிகாரிகளுக்கு அமைச்சர் அதிரடி உத்தரவு
தூத்துக்குடி கோரம்பள்ளம் குளம் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய அத்தியாவசிய பணிகளை உடனடியாக அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் ராஜ கண்ணப்பன் உத்தரவிட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையில் உள்ள தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசியதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் 150 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகனமழை பெய்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. எனவே பொதுமக்களின் அடிப்படை தேவைகளான சுத்தமான குடிநீர் வழங்குதல், தடைபட்டுள்ள மின்சார இணைப்புகளை வழங்குதல், போக்குவரத்து வசதிகளை சீர்செய்தல், நீர்ப்பாசன வசதிகளான குளங்கள், குட்டைகளை செப்பனிடுதல், பொது விநியோகத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களை வழங்க உரிய நடவடிக்கை எடுத்தல் போன்ற பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.
தற்போதுள்ள காலத்திற்கு ஏற்ப அனைத்துத்துறை அலுவலர்களும், பணியாளர்களும் தமது கடமையை உணர்ந்து ஒருங்கிணைந்து களப்பணியாற்ற வேண்டும் என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்தார். முன்னதாக, தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் உள்ள காமராஜ் மெட்ரிகுலேசன் பள்ளி நிவாரண முகாமில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு அமைச்சர் ராஜ கண்ணப்பன் உணவு பொட்டலங்களை வழங்கி அவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த அதிகனமழையின் காரணமாக கோரம்பள்ளம் கண்மாய் நிரம்பியதால் ஏற்பட்ட உடைப்புகளை அமைச்சர் ராஜ கண்ணப்பன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu