தமிழகத்தில் போலி வழக்கறிஞர்கள் அதிகரிப்பு.. நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்...

தமிழகத்தில் போலி வழக்கறிஞர்கள் அதிகரிப்பு.. நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்...
X

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்த தமிழ்நாடு-புதுச்சேரி வழக்கறிஞர் கூட்டமைப்பினர்.

தமிழகத்தில் போலி வழக்கறிஞர்கள் அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு-புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

தூத்துக்குடியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய, குற்றவாளிகள் மூன்று பேர் மட்டுமே சரணடைந்து உள்ள நிலையில் படுகொலை சம்பவத்திற்கு காரணமான முக்கிய குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு-புதுச்சேரி வழக்கறிஞர் கூட்டமைப்பு சார்பில், கூட்டமைப்பின் தலைவர் மாரப்பன், செயலாளர் காமராஜ், துணைத் தலைவர்கள் குடியரசு, ரமேஷ், தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் மைக்கேல் ஸ்டாணிஸ் பிரபு மற்றும் வழக்கறிஞர்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனை சந்தித்து மனு அளித்தனர்.

அப்போது, வழக்கறிஞர் முத்துக்குமார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யாதது குறித்து அதிருப்தி தெரிவித்த வழக்கறிஞர்கள், உடனடியாக அவர்களை கைது செய்து குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

அப்போது, வழக்கறிஞர் முத்துக்குமார் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய ஏடிஎஸ்பி மேற்பார்வையில், இரண்டு டிஎஸ்பிக்கள், 5 ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் தீவிரமாக தேடி வருகிறோம் என்றும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அவர்களிடம் உறுதி அளித்தார்.

தொடர்ந்து, தமிழ்நாடு- புதுச்சேரி வழக்கறிஞர் கூட்டமைப்பு தலைவர் மாரப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் தற்போது வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதை தடுக்க தமிழக அரசு மற்றும் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் தமிழக முழுவதும் வழக்கறிஞர்கள் தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

மேலும், நாமக்கல் மாவட்டத்தில் இரு தினங்களில் இரண்டு போலி வழக்கறிஞர்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளனர். நாமக்கல் நகர காவல் துறையினர் ரவுடிகள், சாராய வியாபாரிகள் ஆகியோரை போலி வழக்கறிஞர்கள் என்ற பெயரில் பத்துக்கும் மேற்பட்ட போலி வழக்கறிஞர்கள் துணையுடன் கட்டப்பஞ்சாயத்து மற்றும் நில அபகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

போலி வழக்கறிஞர்களை பிடித்து கொடுத்தாலும் நாமக்கல் போலீஸார் அவர்கள் வழக்கு பதிவு செய்ய மறுத்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் போலி வழக்கறிஞர்கள் நடமாட்டத்தை தமிழக அரசு மற்றும் தமிழக டிஜிபி தடுத்து நிறுத்த வேண்டும்.

இல்லை என்றால் தமிழகத்தில் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களை ஒன்று திரட்டி நாமக்கல் நகர காவல் அலுவலகத்தை முற்றுகையிடுவோம். மேலும், தமிழகத்தில் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் என மாரப்பன் தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!