தூத்துக்குடியில் 73 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்திய ரஜினி ரசிகர்கள்…

தூத்துக்குடியில் 73 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்திய ரஜினி ரசிகர்கள்…
X

தூத்துக்குடியில் நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றோர்.

நடிகர் ரஜினிகாந்தின் 73 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடியில் அவரது ரசிகர்கள் சார்பில் 73 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது.

தமிழக திரையுலகில் முடிசூடா மன்னனாக திகழ்பவர் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த். அவரது திரைப்படம் வெளியாகிறது என்றாலே அந்த நாளை திருவிழா போல கொண்டாடுவது அவரது ரசிகர்களின் வழக்கம். இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் 73 ஆவது பிறந்தநாள் விழா டிசம்பர் 12 ஆம் தேதி கொண்டாப்பட்டது.

ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவரது ரசிகர்கள் கொண்டாடினர். தூத்துக்குடியில், கடந்த 12 ஆம் தேதி நடைபெற்ற பால்குட ஊர்வலம் நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, சிவன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள ஒருங்கிணைந்த சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர் மன்றம் சார்பில், நடிகர் ரஜினிகாந்தின் 73 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 73 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்ரது.

நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்தின் உறவினர் அனந்த் கலந்து கொண்டு, கர்ப்பிணி தாய்மார்களுக்காக நடிகர் ரஜினிகாந்த் வழங்கிய சேலை, மஞ்சள், குங்குமம், வளையல் உள்ளிட்ட 21 வகையான சீர்வரிசை பொருட்களை வழங்கினார். மேலும், இரண்டு ஏழை பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியின்போது, கர்ப்பிணி தாய்மார்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் செல்போன் மூலம் வாழ்த்து அளித்த ஆடியோ மேடையில் ஒளிபரப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து மேடை நடன கலைஞர் ரஜினிகாந்த் வேடத்தில் ரஜினி பாடலுக்கு பாடலுக்கு நடனம் ஆடி வளைகாப்பு பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ரஜினி ரசிகர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். பின்னர், கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது.

Tags

Next Story
ai solutions for small business