தூத்துக்குடியில் போதைப்பொருளுக்கு எதிராக மாணவ, மாணவியர் ஏற்படுத்திய விழிப்புணர்வு

தூத்துக்குடியில் தமிழக வரைபடம் போன்று அணி வகுத்து நின்று, சிலம்பம் வீசிய மாணவ, மாணவிகள்.
உலக சாதனைக்காக, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது உண்டு. நீண்ட நேரம் யோகாசனம் மேற்கொள்வது, அதிகமானோர் பங்கேற்கும் விழிப்புணர்வு மாரத்தான், ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கூடி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது உண்டு.
அந்த வகையில் போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தூத்துக்குடியில் தமிழ்நாடு வரைபடம் போன்றும் ஒலிம்பிக் சின்னம் போன்றும் மாணவ, மாணவிகள் அணி வகுத்து நின்றனர். மேலும், அணிவகுத்த மாணவ,மாணவிகள் சிலம்பம் வீசியபடியும், யோகாசனம் செய்தபடியும், ஜிம்னாஸ்டிக் செய்தபடியும் வரைபடத்தில் அணி வகுத்து நின்று சாதனை படைத்த நிகழ்வு அரங்கேறியது.
தூத்துக்குடியில் ஆர்.கே. ஜிம்னாஸ்டிக் மற்றும் கராத்தே பயிற்சி பள்ளி மற்றும் கணேசா சிலம்பாட்ட கழகம் ஆகியவை சார்பில் பள்ளி மாணவ மாணவியரிடையே உடல் ஆரோக்கியம் மற்றும் தமிழகத்தில் தற்போது பரவி வரும் கள்ளச்சாராயம் மற்றும் மது குடித்து ஏற்படும் இறப்புகளுக்கு எதிராக போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் 700-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தமிழக வரைபடத்தில் தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பம், மற்றும் தற்காப்பு கலையான கராத்தே ஆகியவற்றை ஒரு மணி நேரம் தொடர்ந்து செய்தும், மேலும் ஒலிம்பிக் சின்னத்தில் ஜிம்னாஸ்டிக் செய்தும் யூனிக்கோ மற்றும் நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.
இந்த உலக சாதனையை பாராட்டி ஜிம்னாஸ்டிக் சிலம்பம் மற்றும் கராத்தே மாஸ்டர்களுக்கு யூனிகோ உலக சாதனை மற்றும் நோபல் உலக சாதனை நிறுவனங்கள் சார்பில் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. மேலும் இந்த சாதனை படைத்த மாணவ மாணவிகள் அனைவரையும் பாராட்டினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu