பெண்களை தொழில் முனைவோராக உருவாக்கிய சமூக சேவை நிறுவனத்துக்கு விருது
சிறந்த சேவை நிறுவனத்திற்கான விருதை மதர் சமூக சேவை நிறுவன திட்ட இயக்குநர் ஷெகினா கென்னடியிடம் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஸ்வர்ணலதா வழங்கி பாராட்டினார்.
மதர் சமூக சேவை நிறுவனம் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழை, எளிய, ஆதரவற்ற விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக மகளிர் சுய உதவி குழுக்கள், பனை பொருள் உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் கூட்டுப் பொறுப்பு குழுக்களை தொடங்கி பல ஆயிரக்கணக்கான பெண்களை இணைத்து அவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதோடு, சேமிப்பு பழக்கத்தை உருவாக்கி உள்ளது.
மேலும், பெண்களுக்கு வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கி வங்கிக்கு சென்று வரும் பழக்கத்தை ஏற்படுத்துவதோடு, தொழில் செய்ய ஆர்வமுள்ள பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தையல், எம்பிராய்டிங், ஆரி ஒர்க், ஜர்தோஸ் ஒர்க்,அழகு கலை, கைவினைப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி, பனை ஓலையில் வண்ணமயமான பொருட்கள் தயாரிக்க பயிற்சி, ஸ்கிரீன் பிரிண்டிங் பயிற்சி, ஆப்செட் பிரிண்டிங் பிரஸ் மற்றும் உலர் சலவை தொழில் தொடங்க பயிற்சி அளித்து, பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ் வழங்கி உள்ளது.
மேலும், மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து 35 சதவீத மானியத்தில் பெண்களுக்கு கடன் உதவி பெற்றுக் கொடுத்து தொழில் செய்ய தொடர்ந்து ஏற்பாடு செய்து கொடுத்து வருகிறார்கள். இந்த சேவையின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் தொழில் செய்து பொருளாதார மேம்பாடு அடைந்து உள்ளார்கள்.
இந்த சேவையை அங்கீகரித்து, பாராட்டி, ஊக்கப்படுத்தும் விதமாக தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நல சங்கம் சார்பில் காமராஜ் கல்லூரியில் பெண் தொழில் முனைவருக்கான கருத்தரங்கம், கைத்தொழில் பயிற்சி மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நல சங்கத்தின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார்.
இ.சி.ஓ.பி.எல். குரூப் நிறுவனர் எட்வின் சாமுவேல் தலைமை தாங்கினார். காமராஜ் கல்லூரி முதல்வர் பூங்கொடி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டு துறை உதவி இயக்குநர் செரினா பப்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாவட்ட தொழில் மையப் பொது மேலாளர் ஸ்வர்ணலதா கலந்துகொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக அளவில் சிறப்பாக மகளிர் தொழில் முனைவோரை உருவாக்கிய மதர் சமூக சேவை நிறுவனத்திற்கு "சிறந்த சேவை நிறுவனத்திற்கான விருதினை" திட்ட இயக்குநர் ஷெகினா கென்னடியிடம் வழங்கி வாழ்த்தினார்.
நிகழ்ச்சியின்போது, சிட்பி துணை பொது மேலாளர் சுனில் குமார் , துடிசியா தலைவர் நேரு பிரகாஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் மதர் சமூக சேவை நிறுவன இயக்குநர் கென்னடி, லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குநர் பானுமதி, மகளிர் சுய உதவி குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள், பனை பொருள் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், கல்லூரி மாணவிகள் உட்பட பெண்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu