பொதுமக்களை தாக்கி பணம், நகைகள் பறிப்பு: தூத்துக்குடியில் 5 பேர் கைது
பைல் படம்.
தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டி. சவேரியார்புரம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் (28) என்பவர் கடந்த 6 ஆம் தேதி அதிகாலை அதே பகுதியில் உள்ள ஒரு வங்கி அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர்கள் அஜித்குமாரை அரிவாளால் தாக்கி ரத்தக் காயம் ஏற்படுத்தி செல்போன் மற்றும் பணம் ரூபாய் 8,500/-யும் பறித்து சென்றுள்ளனர்.
அதேபோன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி 4 ஆவது ரயில்வே கேட் பகுதியில் நின்று கொண்டிருந்த ஏரல் சேதுக்குவாய்த்தான் பகுதியைச் சேர்ந்த ஹிதயத்துல்லா (51) என்பவரை மர்ம நபர்கள் கத்தியால் தாக்கி ரத்தக் காயம் ஏற்படுத்தி செல்போன் மற்றும் பணம் ரூபாய் 4000-யும் பறித்து சென்றுள்ளனர்.
மேலும், குறுக்குச்சாலையில் நின்று கொண்டிருந்த ஓட்டப்பிடாரம் வ.உ.சி தெருவை சேர்ந்த கிருஷ்ணசாமி (72) என்பவரை கத்தியால் தாக்கி இரத்தக் காயம் ஏற்படுத்தி 2½ பவுன் எடையுள்ள 2 தங்க மோதிரங்களையும் பறித்துச் சென்றுள்ளனர். அப்போது, அந்த வழியாக வந்து கொண்டிருந்த ஓட்டப்பிடாரம் கோட்டை தெருவை சேர்ந்த மாடசாமி (60) என்பவரையும் கத்தியை காட்டி மிரட்டியும் தாக்கியும் ஏழரை பவுன் எடையுள்ள மோதிரம், பிரேஸ்லெட் மற்றும் செயின் ஆகியவற்றை பறித்துச் சென்றுள்ளனர்.
அடுத்தடுத்து நடைபெற்ற இந்த வழிப்பறி சம்பவங்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் வழக்குகள் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்தச் சம்பவங்கள் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், தூத்துக்குடி (பொறுப்பு) காவல் துணை கண்காணிப்பாளர் சம்பத், மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் லோகேஸ்வரன் ஆகியோர் மேற்பார்வையில் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன், ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் முத்துராமன், புளியம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் தர்மர் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து சம்பந்தப்பட்ட எதிரிகளை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், தனிப்படை போலீசார் சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமிரா பதிவுகள் மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், நகை, பணம் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது தூத்துக்குடி கோவில் பிள்ளைவிளை பகுதியைச் சேர்ந்த மகாராஜா (19), தூத்துக்குடி யுனிகோ நகரை சேர்ந்த ஜவகர் (44), தூத்துக்குடி பாத்திமா நகரை சேர்ந்த மோகித் (19), புளியம்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த ரோஷன் (20), தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் (19) மற்றும் தூத்துக்குடி பகுதியை சேர்ந்த இளஞ்சிறார் ஒருவர் ஆகிய 6 பேர் என்பது தெரியவந்தது.
பணம் மற்றும் தங்க நகைககளை பறித்து சென்று 6 பேரும் புளியம்பட்டி பகுதியிலுள்ள ஒரு மேன்சனில் அறை எடுத்து தங்கி இருந்துள்ளனர். பின்னர் அவர்கள் புளியம்பட்டி பகுதியிலுள்ள ஒரு குவாரியில் குளிக்க சென்றபோது, மோகித் மற்றும் செல்வகுமார் ஆகிய 2 பேரும் அங்குள்ள பாறையில் வழுக்கி விழுந்ததில் இருவருக்கும் கை முறிவு ஏற்பட்டு திருநெல்வேலி சென்று மாவுகட்டு போட்டுவிட்டு அனைவரும் மீண்டும் அறையில் வந்து தங்கியுள்ளனர்.
இதனையடுத்து உடனடியாக தனிப்படை போலீசார் புளியம்பட்டி பகுதியிலுள்ள மேன்சனில் பதுங்கி இருந்த மகாராஜா, ஜவஹர், மோகித், செல்வகுமார் மற்றும் ரோஷன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். இளஞ்சிறுவனை அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.
மேலும், ரூபாய் 4,50,000/- மதிப்புள்ள 10 பவுன் தங்க நகைகள், 2 செல்போன்கள் ஆகியவற்றையும், கொள்ளையடிப்பதற்கு பயன்படுத்திய 3 இருசக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். நகை, பணம் பறிப்பு வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்த தனிப்படை போலீசார் அனைவருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu