தூத்துக்குடியில் கல்விக் கடன் விவகாரத்தில் வங்கி மேலாளர், ஊழியர் மீது தாக்குதல்

தூத்துக்குடியில் கல்விக் கடன் விவகாரத்தில் வங்கி மேலாளர், ஊழியர் மீது தாக்குதல்
X

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வங்கி மேலாளர் திவாகர், ஊழியர் ஈஸ்வரன்.

தூத்துக்குடியில் கல்விக் கடனை திரும்ப செலுத்தாத காரணத்தினால் அடகு நகையை திருப்பி வழங்காத ஆத்திரத்தில், வங்கி மேலாளர் மற்றும் வங்கி ஊழியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

தூத்துக்குடி புதிய முனியசாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ். இவர், தனது மகன் இசக்கி செல்வம். பெயரில் தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரனி கிராமத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் கடந்த 2016 ஆம் ஆண்டு கல்வி கடன் வாங்கி உள்ளார். ஆனால் அந்த கல்வி கடனை முறையாக அவர் கட்டாமல் இருந்து வந்துள்ளார்.

மேலும், பொன்ராஜ் அதே வங்கியில் தனது நகையையும் அடகு வைத்து பணம் பெற்றுள்ளார். இந்நிலையில் அடகு நகையை திருப்ப சென்றபோது கல்வி கடனை கட்டாததால், நகையை திருப்பித் தர மாட்டோம் என வங்கி மேனேஜர் திவாகர், பொன்ராஜிடம் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து பொன்ராஜ் இன்று காலை தனது மகன் இசக்கி செல்வதுடன் வங்கிக்கு சென்று வங்கி மேலாளர் திவாகருடன் பேசி உள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் இசக்கி செல்வம், வங்கி மேலாளர் திவாகர் மற்றும் வங்கி ஊழியர் ஈஸ்வரன் ஆகியோரை வங்கியின் உள்ளே வைத்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் அலுவலகத்தில் இருந்த பொருட்களையும் கீழே தள்ளி சேதப்படுத்தினராம்.

தாக்குதலில் காயமடைந்த வங்கி மேலாளர் திவாகர் மற்றும் வங்கி ஊழியர் ஈஸ்வரன் ஆகியோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தாக்குதலில் ஈடுபட்ட வாலிபர் இசக்கி செல்வம் மற்றும் அவரது தந்தை பொன்ராஜ் ஆகியோரை தாளமுத்து நகர் காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story
ai in future agriculture