குலசை தசரா விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி. (கோப்பு படம்).
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை இரவு 12 மணிக்கு நடைபெறுகிறது. தனையடுத்து 25.10.2023 அன்று கொடியிறக்க நிகழ்ச்சியுடன் இந்தத்திருவிழா நிறைவு பெறும்.
திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும், பக்தர்களின் பாதுகாப்பு வசதியையும் கருத்தில் கொண்டு பல்வேறு போக்குவரத்து மாற்றம் மற்றும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழா சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு முன்னேற்பாடு நடவடிக்கை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. காவல் துறையினர் 15 உதவி மையங்கள் அமைத்து வாக்கி டாக்கி மூலமும் அவர்களுக்குள் ஏதாவது தகவல் பரிமாறிக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதற்கும், அவர்களுக்கு இடர்பாடுகள் ஏற்பட்டால் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதனை அணுகலாம். போக்குவரத்து குறித்து விரிவான அறிவுரை கொடுத்திருக்கிறோம். கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரச்சனைகள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்கு முன்னேற்பாடு செய்திருக்கிறோம்.
மொபைல் டவர் அமைக்க ஏற்பாடு செய்திருக்கிறோம். மொபைலில் தொடர்பு கொள்ள முடியாவிட்டால் காவல்துறை உதவி மையம் வாக்கி டாக்கியின் மூலம் தொடர்பு கொள்ள போதுமான வசதிகள் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறோம். ஊராட்சி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மூலம்; பக்தர்களுக்கு குடிநீர், உணவு நேரடியாக வழங்க ஏற்பாடு செய்திருக்கிறோம். கிட்டத்தட்ட 52 சிசிடிவி கேமராக்கள் மூலமும், காவல்துறை வாகனங்கள் மூலமும் கண்காணிப்பு பணிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
வாகனம் நிறுத்துமிடம் தெளிவாக வரையறை செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்துள்ளார்கள். கடந்த ஆண்டுகளில் இடையூறுகள் இருந்தால் அவை மீண்டும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம். தசராவுக்கு வேடம் அணிந்தவர்கள் தனியாகவும், பொதுமக்கள் தனியாகவும் செல்ல வழி செய்திருக்கிறார்கள். காவல் துறை மூலம் ஜாதி ரீதியான பிரச்சனைகளுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகள், பெரியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வருவதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்வதற்கு ஆலோசித்திருக்கிறோம் என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu