என்ஜினீயரிங் பயிலும் மாணவரா நீங்கள்? இதோ உங்களுக்கான பேச்சுப் போட்டி வாய்ப்பு

என்ஜினீயரிங் பயிலும் மாணவரா நீங்கள்? இதோ உங்களுக்கான பேச்சுப் போட்டி வாய்ப்பு
X

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன். (கோப்பு படம்).

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தூத்துக்குடியில் பொறியியல் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடைபெறுகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி நடத்தும் பொறியியல் பயிலும் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடத்தப்படுகிறது. இதுகுறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பு அணிகளின் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி சார்பில் அக்டோபர் 16 ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி அளவில் குறுக்குச்சாலையில் உள்ள கீதாஜீவன் கலை, அறிவியல் கல்லூரியில் வைத்து பொறியியல் பயிலும் மாணவர்களுக்கு மாபெரும் பேச்சுப் போட்டி நடைபெற இருக்கிறது.

இந்தப் போட்டியில் இளங்கலை, முதுகலை பயிலும் பொறியியல் மாணவர்கள், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. மாணவர்கள் கலந்து கொள்ளலாம். தொழில்நுட்பக் கல்விக்கு தோள்கொடுத்த கலைஞர், தொழில்துறையை உயர்த்திய தமிழினத் தலைவர், திராவிட மாடலும் திறன் மிக்கக் கல்வியும், தெற்குச் சூரியன், கலைஞரும் தமிழும் ஆகிய 5 தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பில் 5 நிமிடங்கள் பேச வேண்டும்.

மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல்பரிசாக ரூ.10,000-மும், இரண்டாவது பரிசாக ரூ. 5,000-மும், மூன்றாம் பரிசாக ரூ. 3,000-ம் ரொக்கப்பரிசும், கேடயமும் வழங்கப்படும். மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் மண்டல அளவில் நடைபெறும் போட்டியிலும், மண்டல அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவிலும் நடைபெறும் பேச்சுப் போட்டியிலும் பங்கு பெறலாம்.

மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கு பெற்று முதல் பரிசு பெறும் மாணவருக்கு பரிசுத் தொகையாக ரூ. 5,00,000 மற்றும் சுழற்கோப்பையும் வழங்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் இளங்கலை, முதுகலை பயிலும் பொறியியல் மாணவர்கள், அனைவரும் போட்டியில் பங்கு பெறலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது