தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மீன் வளர்ப்பு பயிற்சி முகாம்
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் நடைபெற்ற பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மீன்வளம் குறித்த இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளோடு பல்வேறு சான்றிதழ் படிப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக, சுயதொழில் தொடங்குவோருக்கு உதவும் வகையில் பல்வேறு தலைப்புகளில் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. மேலும், பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக, தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நீர்வளச் சூழலியல் மேலாண்மைத் துறை சார்பில் ‘மீன் வளர்ப்பு முறையில் நீர் தர மேலாண்மை” குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது.
பயிற்சி துவக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் அகிலன் தலைமை வகித்தார். அவர் பேசும்போது, மீன்வளர்ப்பில் நீர்த்தர மேலாண்மையின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். “மீன்வளர்ப்பில் நீர்தர பிரச்னைகள் மற்றும் மேலாண்மை” என்ற தலைப்பில் பேராசிரியர் பத்மாவதி விரிவுரை ஆற்றினார்.
“மீன்வளர்ப்பில் மிதவை உயரிகளின் பன்முகத்தன்மை” என்ற தலைப்பில் பேராசிரியை ராணி விரிவுரை ஆற்றினார். “மீன் வளர்ப்பில் மண் தரத்தின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் உதவி பேராசிரியர் மணிமேகலை விரிவுரை ஆற்றினார். நீர்தர பகுப்பாய்வு குறித்து உதவிப் பேராசிரியை ஜூலியட் செல்வராணி செயல்விளக்கம் செய்து காண்பித்தார்.
இந்தப் பயிற்சியில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள போப்ஸ் கல்லூரி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியைச் சேர்ந்த முதநிலை மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். நிறைவு விழாவின்போது பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu