ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்த ரயில்களை இயக்க பயணிகள் நலச்சங்கம் வலியுறுத்தல்..!
தூத்துக்குடி சந்திப்பு (கோப்பு படம்)
தூத்துக்குடி மாவட்ட ரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில், தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:
கடந்த நான்கு வருடங்களுக்கு முன் கொரோனா காலத்தில் தூத்துக்குடி- கோயம்புத்தூர் லிங்க் எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி -சென்னை பகல் நேர லிங்க் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டுக் கொண்டிருந்தது. தற்போது அந்த ரயில்கள் இயக்கப்படவில்லை. ரத்து செய்யப்பட்டு விட்டது
ஆதலால், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கோரிக்கை விடுத்ததின் பேரில், தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் வாரம் மூன்று முறை ரயிலும், பாலக்காடு-திருநெல்வேலி வரை இயக்கப்படும் பாலருவி விரைவு ரயிலை தூத்துக்குடி வரை நீடிப்பு செய்தல் என இரண்டு ரயில்களும் ரயில்வே வாரியத்தால் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால், அந்த இரண்டு ரயில்களையும் இயக்க ரயில்வே நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பயணிகள் நலச்சங்கத்தின் சார்பில் இதுகுறித்து பல்வேறு கடிதங்களும் நேரடியாக தெரிவித்தும் செவி சாய்க்கவில்லை. மற்ற நகரங்களுக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தவுடன் இயக்குகிறீர்கள். தூத்துக்குடி மட்டும் தங்கள் நிர்வாகத்தால் மீண்டும் மீண்டும் புறக்கணிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.
கோயம்புத்தூர் -பெங்களூர் "வந்தே பாரத்" ரயில் பாரத பிரதமர் நரேந்திர மோடியால் விரைவில் தொடங்கப்பட உள்ளது. அந்த விழாவில் பாரதப் பிரதமர் தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் வாரம் மூன்று முறை ரயிலையும் மற்றும் பாலக்காடு- திருநெல்வேலி பாலருவி விரைவு ரயிலை தூத்துக்குடி வரை தொடங்கி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டிக் கொள்கிறோம்.
இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு தூத்துக்குடி- மேட்டுப்பாளையம், பாலக்காடு- திருநெல்வேலி பாலருவி விரைவு ரயிலை தூத்துக்குடி வரை விரைவாக நீடிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அதேபோல், தூத்துக்குடி- வாஞ்சி மணியாச்சி சந்திப்பு செல்லும் காலை நேர ரயிலை மதுரை அல்லது சென்னைக்கு நீடிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்க செயலாளர் பிரமநாயகம் மனுவில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu