சாயர்புரம் போப் கல்லூரியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
கருத்தரங்கில் சுகாதார பணிகள் துணை இயக்குநரின் தொழில்நுட்ப நேர்முக உதவியாளர் மருதம் பிரைட்டன் பேசினார்
தமிழகத்தில் இளைஞர்கள், மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் புகையிலை பழக்கம் வெகுவாக அதிகரித்து வருகிறது. இதனால் இளைஞர்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் படிப்பில் பின் தங்குவதோடு பிற்காலத்தில் பல்வேறு நோய்களுக்கு ஆட்படுகிறார்கள்.
அதனை தடுப்பது மட்டுமல்ல அறவே இல்லாமல் ஒழிக்க வேண்டும் என்ற உன்னதமான குறிக்கோளோடு, தமிழ்நாடு அரசு சுகாதாரப் பணிகள், மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம், மற்றும் மதர் சமூக சேவை நிறுவனம், லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவனம் போப் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் சாயர்புரம் போப் கல்லூரி அரங்கத்தில் வைத்து புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு வருகை தந்தவர்களை உதவி பேராசிரியர் தினகரன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) செல்வகுமார் தலைமை தாங்கினார். மதர் சமூக சேவை நிறுவன இயக்குநரும், புகையிலை கட்டுப்பாட்டு கமிட்டி உறுப்பினருமான கென்னடி, லீடு டிரஸ்ட் இயக்குநர் பானுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக சுகாதாரப் பணிகள் துணை இயக்குநரின் தொழில்நுட்ப நேர்முக உதவியாளர் மருதம் பிரைட்டன் கலந்து கொண்டு, புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கின் நோக்கங்கள் பற்றி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
புகையிலை ஒரு உயிர் கொல்லியே, வாழ்க்கையைத் தேர்ந்தெடு புகையிலையை அல்ல. புகையிலையில் நிகோடியன் என்ற அடிமைப்படுத்தும் பொருள் உள்ளது. இது கஞ்சா ஹான்ஸ் விட பல மடங்கு அதிக அடிமைப்படுத்தும் சக்தி வாய்ந்தது. புகையிலை பழக்கத்தால் வருடத்திற்கு 9 லட்சம் பேர் இந்தியாவில் பலியாகிறார்கள். அதாவது ஒரு நாளைக்கு 2500 பேர் பலியாகிறார்கள்.
வாய் குரல்வளை மற்றும் நுரையீரல் புற்றுநோய் 90 சதவீதம் புகையிலை பழக்கத்தினால் மட்டுமே வருகிறது. புகையிலை பிடிப்பதில் 89% பேர் 18 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களே அடிமை ஆகிறார்கள். புகையிலை உபயோகம் வாய் தொண்டை நுரையீரல் மூக்குக்குழாய் உணவுக் குழாய் சிறுநீர்ப்பை சிறுநீரகம் கணையம் கர்ப்பப்பையின் பாய் ஆகிய உறுப்புகளில் புற்றுநோய் ஏற்படுகிறது. மேலும் புகையிலை நுரையீரல் கோளாறுகளையும் மூச்சு திணறல்களையும் ஏற்படுத்தும். எனவே புகையிலைப் பழக்கத்தை அறவே ஒழிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய மாவட்ட ஆலோசகர் டாக்டர் வேணுகா புகையிலையில் என்னென்ன வேதிப்பொருட்கள் கலந்துள்ளன அந்த வேதிப்பொருட்கள் உடம்பில் என்னென்ன தீங்குகளை ஏற்படுத்துகின்றன என்பது பற்றி விளக்கி பேசினார்.
புகையிலை கட்டுப்பாட்டு மையப் சமூக பணியாளர் ரோசாரி பாத்திமா பொது இடங்களில் புகை பிடிப்பதினால் புகை பிடிப்பது மட்டுமல்ல குழந்தைகள் பெண்கள் முதியோர்கள் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் பொது இடங்களில் புகைப்பிடிப்புகளுக்கு வழங்கப்படும் தண்டனைகள், அபராதங்கள் பற்றி தெளிவாக எடுத்து கூறினார்.
நிகழ்ச்சியில், கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் அனைவரும் நூறு சதவீதம் புகையிலையில்லாத சுற்றுச்சூழலை உருவாக்க பாடுபட வேண்டும் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் சாயர்புரம் போப் கல்லூரி மாணவ, மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் கணிதவியல் முதலாமாண்டு மாணவர் பீட்டர் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை மதர் சமூக சேவை நிறுவனப் பணியாளர்கள் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் சிறப்பாக செய்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu