தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பை உடனே நடத்த அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
தூத்துக்குடி விமான நிலையத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கும் நிகழ்வுகள் நடந்து வருகிறது. இதை இலங்கை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இந்திய அரசும் தடுக்க வேண்டும். சமீப காலத்தில் தென் மாவட்டங்களில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. கனிம வளங்கள் கொள்ளையடிப்பதை மேலோட்டமாக பார்க்க கூடாது. அதை தடுத்து நிறுத்த வேண்டும் .
ஜாதி வாரி கணக்கெடுப்பு தமிழக அரசு நடத்த வேண்டும். கடந்த வாரம் பீகார் மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியதை வெளியிட்டு இருக்கிறார்கள் அவர்கள் நடத்துவதற்கு கிட்டத்தட்ட 45 நாட்கள் 500 கோடி ரூபாய் செலவில் 13 கோடி மக்களுக்கு கணக்கெடுப்பு நடத்தினார்கள். ஜாதி வாரி என்றால் எண்ணிக்கை மட்டும் அல்ல. ஒவ்வொரு சமுதாயமும் எந்த நிலையில் இருக்கிறார்கள் அவருடைய சமூக பின் தங்கிய நிலை கல்வி நிலை சுற்றுச்சூழல் சுகாதாரம் எல்லாவற்றையும் எடுப்பதுதான் கணக்கெடுப்பு.
பல்வேறு மாநிலங்கள் இந்தியாவிலே ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என கூறியிருக்க கூடிய நிலையில் தமிழ்நாட்டு மட்டும் மத்திய அரசு நடத்த வேண்டும் இது எங்களுடைய வேலை கிடையாது என சமூக நீதியை பேசுகின்ற திமுக அரசு அவருடைய கடமையை தட்டி கழித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் அதிக இட ஒதுக்கீடு தமிழகத்தில் மட்டும் தான் இருக்கிறது. 69 விழுக்காடு வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவிற்கு கிடையாது.
நாங்கள் வெற்றி பெற்றதும் ஒரு வாரத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என தி.மு.க. கூறினார்கள். ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகிறது இன்னும் ரத்தாகவில்லை.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம். தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் இருக்கிறது விரைவில் முடிவெடுப்போம். மகளிர் உரிமைத் தொகை அறிவித்த போது கூறிய வாக்குறுதியை நீட் தேர்வை போல் தான் நினைக்கிறேன். அனைவருக்கும் கொடுப்போம் என சொன்னது, இன்று தகுதி அடிப்படையில் என்று கூறுவதை ஏற்க முடியாது. கொடுத்தால் முழுமையாக அனைவருக்கும் கொடுக்க வேண்டும். குறைபாடு இருக்கக் கூடாது.
தமிழகத்தில் கஞ்சாவை கட்டுப்படுத்தினால் சட்டம் ஒழுங்கு சீராக இருக்கும். எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்றுக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சர் நேரடியாக சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மாதாமாதம் கடுமையான கட்டளைகளை காவல்துறைக்கு இடவேண்டும். காவல்துறைக்கு தெரியாமல் ஒரு பொட்டலம் கஞ்சா கூட விற்க முடியாது.
இவ்வாறு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu