தூத்துக்குடி அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உதவிக்கு ஏங்கும் மூதாட்டி
80 வயது மூதாட்டி.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் பெய்த தொடர் கனமழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டதில் அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பரிதவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள எப்போதும் வென்றான் கிராமத்தில், கணவர் இறந்த நிலையில் கவனிப்பாரின்றி தானே தனியாக வாழ்ந்து வரும் 80 வயது மூதாட்டி கிருஷ்ணம்மாளையும் விட்டு வைக்கவில்லை இந்த கனமழை.
எப்போதும் வென்றான் கிராமத்தைச் சேர்ந்த பாலையா என்பவரின் மனைவியான 80 வயது மூதாட்டி கிருஷ்ணம்மாள், தனது கணவரை இழந்த நிலையில் பல ஆண்டுகளாக தன்னந்தனியாக வாழ்ந்து வருகிறார். தள்ளாடும் இந்த முதுமையிலும கூட 100 நாள் வேலைக்குச் சென்றும், அரசு தரும் முதியோர் உதவித்தொகையைக் கொண்டும் தனது வாழ்நாட்களை கழித்து வருகிறார்.
இத்தகைய வறுமையான சூழ்நிலையில் கடந்த வாரம் பெய்த தொடர் கனமழையின் போது, மூதாட்டி கிருஷ்ணம்மாள் வாழ்ந்து வந்த வாடகை வீட்டுக்குள் மழைநீர் புகுந்ததில், சிக்கிய மூதாட்டி வீட்டினுள் வழுக்கி விழுந்து முகம், கை, காலில் காயம் ஏற்பட்டு தற்போது தான் மீண்டு வந்துள்ளார்.
இருப்பினும், ஏற்கெனவே மூதாட்டி தங்கி வந்த சேதமடைந்த வாடகை வீடு தற்போது கன மழையால் பெரிதும் சேதமடைந்து விரிசல்களுடன் எப்போதும் வேண்டுமானாலும் விழுந்துவிடும் என்பதைப் போல காட்சியளிக்கிறது. மேலும் வறுமையின் பிடியில் சிக்கித்தவித்து வரும் மூதாட்டி தற்போது உணவிற்கே பெரும் சிரமத்திற்குள்ளாகி வரும் சூழ்நிலையில் வீட்டை சரிசெய்து, மூதாட்டியின் வாழ்வாதாரத்திற்கு தமிழக அரசு தான் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார். அரசு மூதாட்டி கிருஷ்ணம்மாளுக்கு உதவ முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu