சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை

சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை
X

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி. (கோப்புபடம்).

சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி ஆட்சியர் லட்சுமிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் சாலைகளில் கால்நடைகள் சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் பகுதியில் சாலையில் சுற்றித் திரிந்த கால்நடை மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்தார்.

இதேபோல, தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் தினமும் ஆங்காங்கே விபத்துகள் நிகழ்ந்து வருகிறது. இதனால், கால்நடைகள் வளர்ப்போர் வீட்டில் தனியாக கொட்டில் வைத்து வளர்க்க வேண்டும் என்றும் சாலைகளிலும், தெருக்களிலும் சுற்றித் திரிய விடக்கூடாது என்றும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல முறை அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்ட சாலை பாதுகாப்பு குழுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், நகராட்சி பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் பஞ்சாயத்து சாலைகள் ஆகிய சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், விபத்து ஏற்படுத்தும் வகையிலும் சுற்றித்திரியும் கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் சாலைகளில் சுற்றித்திரிய விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

மீறினால் சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை அந்தந்த பகுதிகளில் உள்ள கோசாலைகளில் ஒப்படைத்து, கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது உரிய அபராதம் விதிக்கப்படும். மீண்டும் தொடர்ந்து கட்டுப்பாடின்றி கால்நடைகளை சுற்றித்திரிய விடும் உரிமையாளர்கள் மீது சம்பந்தப்பட்ட காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story
நா.த.க. வேட்பாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு