போலி பத்திரிகையாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் சாமிநாதன் உறுதி

போலி பத்திரிகையாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் சாமிநாதன் உறுதி
X

தூத்துக்குடியில் ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் மணி மண்டபத்தில் அமைச்சர்கள் சாமிநாதன், கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

போலி பத்திரிகையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி எம்.ஜி.ஆர் பூங்காவில் ரூ. 77.87 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் மணிமண்டப கட்டுமானப் பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம்- மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து, அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது:

மக்களுக்காக அரும்பணியாற்றிய ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்தீஸுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க சட்டமன்றத்திலே அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் சுமார் ரூ. 77.87 லட்சம் மதிப்பில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது. மணிமண்டபத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அக்டோபர் 13 ஆம் தேதி காணொலி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளார்.

இதேபோல தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வீரமாமுனிவருக்கு காமநாயக்கன்பட்டியில் மணிமண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதையும் முதலமைச்சர் ஸ்டாலின் 13 ஆம் தேதி திறந்து வைக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் நேரத்திலே அறிவித்த வாக்குறுதியான பத்திரிக்கையாளர் நலவாரியம் அமைக்கப்பட்டு இருக்கிறது.

போலி பத்திரிக்கையாளர்கள் குறித்து தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருக்கிறது. அதை உரிய முறையில் பரிசீலித்து கொண்டிருக்கிறோம். அரசு நிச்சயமாக அதுகுறித்து மூத்த பத்திரிக்கையாளர்கள் குழு அமைத்து அதன் மூலமாக அதை ஆய்வு செய்து உண்மையான பத்திரிக்கையாளர்கள், போலி பத்திரிக்கையாளர்கள் யார் என்பதை கண்டறிந்து செய்தித்துறை நிச்சயமாக அதற்குரிய நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து எட்டயபுரத்தில் அமைந்துள்ள மகாகவி பாரதியார் மணிமண்டபத்தில் உள்ள பாரதியார் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்கள் அறிந்துகொள்ள உதவும் வகையில் விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாடு என்ற தலைப்பில் ரூ. 5.06 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ஒளி-ஒலிகாட்சியின் செயல்பாட்டினை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் தொடங்கி வைத்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட மகாகவி பாரதியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தினை அமைச்சர் சாமிநாதன் பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன்;, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story