தூத்துக்குடி மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு: மக்கள் பாதிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு: மக்கள் பாதிப்பு
X

தூத்துக்குடியில் இன்று குறைவாக வழங்கப்பட்ட ஆரஞ்சு நிற ஆவின் பால் பாக்கெட்டுகள். - கோப்புப்படம் 

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆவின் பால் விநியோகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே ஆவின் பால் தட்டுப்பாடு தொடர்ந்து நிலவி வருகிறது. ஏற்கெனவே நிறைகொழுப்பு ஆரஞ்சு நிற பாக்கெட்டுகள் உற்பத்தி முற்றிலுமாக நிறுத்தப்பட்டு நிலைப்படுத்தப்பட்ட பச்சை நிற பாக்கெட்டுகள் மற்றும் கொழுப்புச்சத்து இல்லாத ஊதா நிற பாக்கெட்டுகள் ஆகிய இரண்டு வகைகள் மட்டுமே விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சில தினங்களாக ஆவின் பால் முற்றிலுமாக விநியோகம் நிறுத்தப்பட்ட நிலையில், பால்வளத்துறை அமைச்சர் நாசர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். அதன் பிறகு சில நாட்களில் ஆவின் பால் விநியோகம் சீரானது.

இருப்பினும், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பச்சை நிற ஆவின் பால் பாக்கெட்டுகள் குறைந்த அளவே வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகரம் மற்றும் பல்வேறு பகுதிகளில் ஆவின் பச்சை நிற பாக்கெட்டுகள் விநியோகம் இன்று அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் சராசரியாக 30 ஆயிரம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த விநியோகம் 25000 லிட்டராக குறைக்கப்பட்டது. பின்னர், படிப்படியாக குறைக்கப்பட்டு, இன்று அடியோடு ஆவின் பால் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக முதியவர்கள் குழந்தைகள் பொதுமக்கள் ஆகியோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும், தனியார் பால் நிறுவனங்கள் பால் விற்பனையை ரூபாய் 2 ரூபாய் முதல் ஐந்து ரூபாய் வரை உயர்த்தி உள்ளன. தனியார் பால் நிறுவனங்கள் இந்த ஆண்டு இது நான்காவது முறையாக பால் விலையை உயர்த்தி உள்ளது. இதனாலும் சாதாரண பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

எனவே, தமிழக அரசு மற்றும் ஆவின் நிர்வாகம் பொதுமக்கள் அதிகளவு பயன்படுத்துவோம் ஆவின் பாலை தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தொடர்ந்து ஆய்வு நடத்தி வரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களின் அத்தியாவசியப் பிரச்னையான ஆவின் பால் தட்டுப்பாடு குறித்தும் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings