பள்ளி விழாவில் கருணாநிதி பற்றி கனிமொழி பகிர்ந்த தன்னம்பிக்கை கதை
கீழமுடிமண் புனித வளன் மேல்நிலைப் பள்ளி வெள்ளி விழாவில் கனிமொழி எம்.பி. பேசினார்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கீழமுடிமண் கிராமத்தில் அமைந்துள்ள புனித வளன் மேல் நிலைப்பள்ளி வெள்ளி விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில், சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டு விழாவைத் தொடங்கி வைத்தார்.
விழாவில், கனிமொழி எம்.பி. பேசும்போது மறைந்த முன்னாள் முதல்வரும், அவரது தந்தையுமான கருணாநிதியின் சிறுவயதில் நிகழ்ந்த சம்பவம் குறித்து கூறிய தகவல் விவரம் வருமாறு:-
என்னுடைய தந்தை கருணாநிதி தமிழ்நாட்டிற்கு ஐந்து முறை முதலமைச்சராக இருந்தார். அவர் வாழ்க்கையில் பார்க்காத வெற்றியும் இல்லை. தோல்வியும் இல்லை. தோல்வி வரும் பொது அவர் என்றுமே துவண்டுபோனது இல்லை. ஒரு தேர்தல் தோல்வி, பிறகு அது நாள் அடுத்த வேலை என்ன, அடுத்த தேர்தலுக்கான பணி என்ன? என்று தான் சிந்திப்பதைத் தவிர, இந்த தேர்தல் முடிவு என்பது நமக்கு ஏற்றதாக இல்லை, மகிழ்ச்சி தரக்கூடியதாக இல்லை என கருதி வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டு மனதைக் கஷ்டப்படுத்திக் கொள்ள மாட்டார்.
தோல்வி என்பது யாருக்கும் நிரந்தரமான ஒன்று இல்லை. உங்கள் திறமை எதிலே இருக்கிறது என்று புரிந்து கொண்டு இந்த முறை இல்லை என்றால் அடுத்த முறை நிச்சயமாக நாம் வெற்றி பெற முடியும் என்ற முழு மனதோடு நீங்கள் அதைச் செய்தல், நிச்சயமாக அத்தனை பேரும் வெற்றி பெற முடியும்.
ஒரே ஒரு கதை அவருடைய வாழ்க்கையிலிருந்து, அவருடைய பள்ளி நாட்களில் திருவாரூரில் படித்தார். அங்கே கோவிலில் ஒரு பெரிய குளம் இருக்கிறது. அந்த குளத்தில் நடுவில் ஒரு மண்டபம் இருக்கும் அந்த குளம் மிகவும் பெரிய குளம் அந்த குளத்தின் நடுவில் இருக்கக்கூடிய மண்டபத்திற்கு நிறையப் பேர் நீந்திப் போக ஆசைப்படுவார்கள்.
பொதுவாகப் படகில் போவார்கள், ஏன் என்றால் அவ்வளவு தூரம் இருக்கும்.
ஒரு நாள், கருணாநிதியும் அவருடைய பள்ளிப் பருவ நண்பர் தென்னனும் அந்த குளத்தின் நடுவில் உள்ள மண்டபத்திற்கு நீந்திப் போக வேண்டும் என்று முடிவு செய்தார்கள். பாதி தூரம் நீந்தி வந்து விட்டார்கள். நீண்ட தூரம் நீந்தியதால் இருவரும் களைத்து விட்டார்கள். தென்னன் நாம் திரும்பிப் போய்விடலாம் என்று கருணாநிதியிடம் கூறினார்.
அவரிடம், பாதி தூரம் வைத்துவிட்டோம். மீதி பாதி தூரம் தான் இருக்கிறது. திரும்பி போகும் அதே தூரம், நாம் நீந்தினால் மண்டபத்தைச் சேர முடியும். திரும்பிப் போகிறோம் என்றால் கரைக்குத் தான் போக முடியும். ஆனால் அந்த மீதி தூரம் கடந்து விட்டால் நம் நம்முடைய இலக்கை தொட்டவராக மாறி விடுவோம் என்று கருணாநிதி கூறியதைத் தொடர்ந்து இருவரும் அந்த மண்டபத்தை அடைந்து, சிறிது நேரம் இளைப்பாறிவிட்டுத் திரும்பி வந்தார்கள்.
இது நான் என் வாழ்க்கையில் அவரிடம் கற்றுக் கொண்ட மிகப்பெரிய பாடம். அதை உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். திரும்பப் போவது, விட்டு விடுவது என்பதை இந்த நொடியில் இருந்து உங்கள் மனதில் இருந்து தூக்கி எறிந்து விடுங்கள். நீங்கள் நினைக்கக்கூடிய எல்லையை, இலக்கை நிச்சயமாக அடைந்தே தீருவீர்கள் என்ற தன்னம்பிக்கையோடு நீங்கள் தொடர்ந்து உங்கள் பயணத்தை மேற் கொள்ளுங்கள். வெற்றி என்பது உங்கள் கைகளில் இருக்கக்கூடிய ஒரு விளையாட்டுப் பொருளாக மாறிவிடும் என கனிமொழி எம்.பி. பேசினார்.
விழாவில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu