தூத்துக்குடியில் 55 ஆயிரம் டன் உரத்துடன் தரை தட்டிய கப்பல் பத்திரமாக மீட்பு
தூத்துக்குடி கடல் பகுதியில் தரை தட்டிய சரக்கு கப்பல்.
தூத்துக்குடி வஉசி துறைமுகத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து தினமும் கப்பல்கள் மூலம் உரம், நிலக்கரி, மரத்தடி உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. வெளி நாடுகளில் இருந்து வரும் கப்பல்கள் துறைமுக நுழைவு பகுதிக்கு வந்ததும் அங்கிருந்து இழுவை கப்பல்கள் மூலம் துறைமுக சரக்கு கையாளும் தளத்துக்கு இழுத்துச் செல்லப்படுவது உண்டு.
குறிப்பாக, மிதவை ஆழம் அதிகம் கொண்ட சரக்கு கப்பல்கள் தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்தால் அவற்றை சரக்கு கையாளும் தளத்துக்கு இழுத்து வருவதில் சிரமம் ஏற்படுவது உண்டு. இந்த நிலையில் தூத்துக்குடி துறைமுகத்திற்கு எகிப்து நாட்டில் இருந்து எம்.வி ஜென்கோ பிரிடேட்டர் என்ற சரக்கு கப்பல் சுமார் 55,000 டன் உரத்தை ஏற்றி வந்துள்ளது.
இந்தக் கப்பல் நேற்று காலை துறைமுகத்தின் உள்ளே நுழைய அனுமதி அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து துறைமுக நுழைவுப் பகுதி வழியாக உள்ளே செல்லும்போது கடலில் தவறுதலாக ஆழம் குறைவான பகுதிக்கு கப்பல் சென்றதால் கப்பல் எதிர்பாரத வகையில் தரை தட்டி நின்றது.
இதை தொடர்ந்து இழுவை கப்பல் மூலம் துறைமுக ஊழியர்கள் தரைதட்டிய கப்பலை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பல மணி நேர தொடர் போராட்டத்துக்குப் பிறகும் கப்பலை துறைமுக சரக்கு கையாளும் தளத்துக்கு இழுத்து வர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இதையெடுத்து, கப்பலில் உள்ள உரத்தை சிறிய வகை கப்பல்களுக்கு மாற்றி அவற்றை சரி செய்த பிறகே கப்பலை சரக்கு கையாளும் தளத்துக்கு இழுத்து வர முடியும் என பொறியாளர்கள் கருத்து தெரிவித்தனர். இருப்பினும், சரக்கு கப்பலை ஆழமான பகுதிக்கு இழுத்துச் சென்று மீண்டும் துறைமுக சரக்கு கையாளும் பகுதிக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அந்தப் பணியில் வெற்றி கிடைத்ததைத் தொடர்ந்து தரை தட்டி நின்ற சரக்கு கப்பல் இன்று பத்திரமாக ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டு மீண்டும் பாதுகாப்பான வழித்தடத்தில் தூத்துக்குடி துறைமுக சரக்கு கையாளும் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு உரம் இறக்குமதி செய்யப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu