தூத்துக்குடியில் வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டவர் கைது
தமிழகம் முழுவதும் காவல் துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்படுத்தி வந்த போதிலும், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை என்றே கூறலாம்.
இந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பூசனூர் பகுதியை சேர்ந்த எபனேசர் (45) என்பவர் விளாத்திகுளம் வி. வேடப்பட்டி பகுதியை சேர்ந்த தாளமுத்து (31) என்பவரிடம் அறிமுகமாகி வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி உள்ளார்.
அதை நம்பிய தாளமுத்து வெளிநாட்டு வேலைக்காக எபனேசரிடம் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் தாளமுத்துவுக்கு வேலை வாங்கி தராமலும், கொடுத்த பணத்தை திருப்பி தராமலும் எபனேசர் மோசடி செய்துள்ளார். இதுகுறித்து தான் ஏமாற்றப்பட்டதையறிந்த தாளமுத்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். இதனையடுத்து மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி, மாவட்ட குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் அந்தோணியம்மாள் தலைமையில் உதவி ஆய்வாளர் நிவேதா, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சண்முகசுந்தரம், மோகன்ஜோதி மற்றும் தலைமை காவலர் வேல்ராஜா ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் மோசடியில் ஈடுபட்டதாக எபனேசரை குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுகுறித்து மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் தொடர்ந்து, விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், எபனேசர் இதேபோன்று தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 5 பேரிடம் தலா 40 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கிக்கொண்டு வெளிநாட்டு வேலைக்கான போலியான பணி நியமன ஆணையை கொடுத்து மொத்தம் 2 லட்சத்து 40 ஆயிரம் பணம் மோசடி செய்து ஏமாற்றியுள்ளது தெரியவந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu