தூத்துக்குடியில் வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டவர் கைது
கைது செய்யப்பட்ட லூயிஸ் ராஜ்குமார்.
தூத்துக்குடி ராஜபாளையம் பகுதியை சேர்ந்த மைக்கேல் அண்டோ ஜீனியஸ் என்பவரது மனைவி மரிய சில்வியா (27) என்பவரிடம், தூத்துக்குடி இன்னாசியர்புரம் பகுதியில் உள்ள நீம் பவுண்டேஷன் நிறுவனத்தின் உரிமையாளர் லூயிஸ் ராஜ்குமார் (42) மற்றும் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான அவரது மனைவி கவிதா (32) ஆகியோர் கடந்த 2022 ஆம் ஆண்டு அறிமுகமாகி உள்ளனர்.
மேலும், மரிய சில்வியாவிடம், தாங்கள் தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனுமதியோடு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களை கண்டறிந்து பயிற்சி கொடுக்க ஆசிரியர்களை நியமித்து வருவதாகவும், தங்கள் நிறுவனத்தின் மூலம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணி செய்ய ரூபாய் 50,000 முன்பணம் செலுத்த வேண்டும் என்றும், அவ்வாறு முன்பணம் செலுத்தினால் மாதம் தோறும் ரூபாய் 15,000/- சம்பளம் தருவதாகவும், 15 ஆண்டுகள் வேலை செய்யலாம் என்றும், அரசு வேலை கிடைத்து சென்றாலோ அல்லது இடையில் வேலையை விட்டு நின்றுவிட்டாலோ முன்பணத்தை திருப்பித் தந்து விடுவதாக ஆசை வார்த்தைகள் கூறி உள்ளனர்.
இதையெடுத்து, மரிய சில்வியாவிடம் அவரது வங்கி கணக்கில் இருந்து நீம் பவுண்டேஷன் வங்கி கணக்கிற்கு G.Pay மூலம் ரூபாய் 50,000 பெற்றுக் கொண்டு, அரசின் எந்தவித வழிகாட்டு முறைகளும் இல்லாமல், முறைகேடாக சிலுவைப்பட்டி, பகுதியிலுள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக நியமித்து, ஒப்புக்கொண்டபடி மாதம் தோறும் கொடுப்பதாக கூறிய ஊதியத்தை 4 மாதங்களாக வழங்காமலும், செலுத்திய முன்தொகையை திருப்பி தராமலும் நம்பிக்கை மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து தான் ஏமாற்றப்பட்டதையறிந்த மேற்படி மரிய சில்வியா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சம்பத் மேற்பார்வையில் மாவட்ட குற்ற பிரிவு உதவி ஆய்வாளர் அனிதா, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சண்முகசுந்தரம், மோகன்ஜோதி மற்றும் தலைமை காவலர் வேல்ராஜா ஆகியோர் விசாரணை மேற்கொண்டு, லூயிஸ் ராஜ்குமாரை இன்று கைது செய்தனர்.
இதுகுறித்து மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டதில், லூயிஸ் ராஜ்குமார் மற்றும் மனைவி கவிதா ஆகிய 2 பேரும் சேர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களிடம் முன்பணமாக ரூபாய் 50,000 வீதம் பெற்றுக் கொண்டு அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியமர்த்தி ஒப்புக்கொண்டபடி சம்பளம் வழங்காமலும், முன் தொகையை திருப்பி தராமலும் ஏமாற்றி சுமார் ரூபாய் 15 லட்சத்துக்கும் மேலாக முறைகேடாக பெற்று நம்பிக்கை மோசடி செய்துள்ளது குறிப்பிடதக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu