தூத்துக்குடியில் 4 ஆண்டுகளாக தலைமறைவான ஆயுள் தண்டனை கைதி கைது

தூத்துக்குடியில் 4 ஆண்டுகளாக தலைமறைவான ஆயுள் தண்டனை கைதி கைது
X

கைது செய்யப்பட்ட ஆயுள் தண்டனை கைதி சண்முகையா.

தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதாகி பரோலில் வந்து நான்கு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை கைதியை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கச்சேரி தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் சண்முகையா (57). இவர், தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 38 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 1985 ஆம் ஆண்டு ஆதாயத்திற்காக காளியப்பபிள்ளை என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், சண்முகையாவுக்கு 25.04.1990 அன்று கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

இதையெடுத்து, சண்முகையா சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், சிறையிலிருந்த சண்முகையா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து 24.07.1992 அன்று ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர், இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் சண்முகையாவிற்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்ததன் அடிப்படையில் கடந்த 14.07.2000 அன்று மீண்டும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் சண்முகையா அடைக்கப்பட்டார்.

21 ஆண்டுகளாக சிறையில் இருந்த கைதி சண்முகையா, தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என கடந்த 15.01.2019 முதல் 20.01.2019 வரை ஆகிய 6 நாட்கள் பரோலில் வெளியே வந்தவர் மீண்டும் சிறை செல்லாமல் தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து பாளையங்கோட்டை மத்திய சிறை அலுவலர் தர்மலிங்கம் என்பவர் 21.01.2019 அன்று கொடுத்த புகாரின் பேரில் ஓட்டப்பிடாரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கைதி சண்முகையாவை தேடிவந்தனர்.

இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி, மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் லோகேஸ்வரன் மேற்பார்வையில், ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் முத்துராமன் தலைமையிலான தனிப்படை போலீசார் சண்முகையாவை தேடி வந்தனர்.

இந்த நிலையில், தீவிர விசாரணை மேற்கொண்டு தேடி வந்த நிலையில் சண்முகையாவை தனிப்படை போலீசார் இன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பரோலில் வந்து 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை கைதி சண்முகையாவை கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டினார்.

Tags

Next Story
ai based agriculture in india