தூத்துக்குடி மாவட்டத்தில் தங்க நகைகளை மோசடி செய்த வழக்கில் 8 பேர் கைது

பைல் படம்
தூத்துக்குடி புதியம்பத்தூர், நடுவக்குறிச்சி பகுதியை சேர்ந்த மதன்குமார் என்பவரிடம், அதே பகுதியை சேர்ந்த கிரேனா (40), ஜெயலெட்சுமி (40) மற்றும் பாக்கியராஜ் (25) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து தங்களிடம் தங்க நகைகளை கொடுத்தால், அதை தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து அந்த பணத்தை ஷேர்மார்க்கெட், நிதி நிறுவனம் போன்றவற்றில் முதலீடு செய்து லாபம் ஈட்டித் தருவதாக கூறி உள்ளனர்.
10 பவுன் நகை கொடுத்தால் 10 நாட்களில் நகையுடன் ரூபாய் 10,000-மும் சேர்த்து கொடுப்பதாகவும், மேலும் 35 பவுன் நகை கொடுத்தால் கார் வாங்க முன்பணம் கட்டுவதாகவும் கூறி உள்ளனர். இதை நம்பிய மதன்குமார் கடந்த 06.05.2023 அன்று தனது தாய் மற்றும் சகோதரியிடம் இருந்து 35 பவுன் தங்க நகைகளையும், கடந்த 09.05.2023 அன்று தனது உறவினர்களிடம் இருந்து மேலும் 50 பவுன் தங்க நகைகளையும் வாங்கி கொடுத்துள்ளார்.
இதையெடுத்து, மதன்குமாருக்கு ரூபாய் 40,000 மட்டுமே கொடுத்துவிட்டு, கார் வாங்க முன்பணமும் கட்டவில்லை. இதனால் சந்தேகமடைந்த மதன்குமார் கடந்த 26.06.2023 அன்று கிரேனா வீட்டிற்கு சென்று நகைகளை தருமாறு கேட்டதற்கு, 3 பேரும் சேர்ந்து மதன்குமாரிடம் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனையடுத்து மதன்குமார் அளித்த புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், மோசடியில் ஈடுபட்டதாக கிரேனா, ஜெயலெட்சுமி மற்றும் பாக்கியராஜ் ஆகிய 3 பேரையும் கடந்த 10.07.2023 அன்று கைது செய்து அவர்களிடம் இருந்து சுமார் 25 லட்சம் மதிப்புள்ள சுமார் 69 பவுன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர்.
மேலும், இதுகுறித்து மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சம்பத் மேற்பார்வையில் மாவட்ட குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் அந்தோணியம்மாள் தலைமையிலான குழுவினர் மோசடி செய்தவர்களுக்கு உதவியாக இருந்தவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
மதன்குமாரிடம் பெற்ற தங்க நகைகளை தனியார் நிதிநிறுவனத்தில் அடகு வைக்க உதவியாக இருந்த அந்த நிதிநிறுவன ஊழியர்களான ஓட்டப்பிடாரம் சிலோன் காலனியை சேர்ந்த சந்தியா (24), தூத்துக்குடி புதியம்புத்தூர் பகுதியை சேர்ந்த கிஷோர் ராகுல் (23), தூத்துக்குடி முள்ளக்காடு காந்திநகர் பகுதியை சேர்ந்த தங்ககுமார் (31), புதியம்பத்தூர் நடுவக்குறிச்சி பகுதியை சேர்ந்த பட்டு மாரியப்பன் (31), புதியம்பத்தூர் ஆர். சி தெருவை சேர்ந்த சுந்தர விநாயகம் (23), ஓட்டப்பிடாரம் வடக்கு பரும்பூர் பகுதியை சேர்ந்த மாரிச்செல்வம் (29) புதியம்பத்தூர் பகுதியை சேர்ந்த ராஜலெட்சுமி (27) மற்றும் புதியம்புத்தூர் பகுதியை சேர்ந்த டெய்லரான ராஜ்குமார் (42) ஆகிய 8 பேரையும் அண்மையில் கைது செய்தனர். இந்த சம்பவம் தொட்பாக மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu