கொலை வழக்கில் கைதான 6 பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொள்ளை, புகையிலைப் பொருட்கள் விற்பனை, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல், போக்சோ வழக்குகளில் கைதாவோர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் காவல் நிலையப் பகுதியில் நிகழ்ந்த கொலை வழக்கில் கைதான 6 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த 03.08.2023 அன்று செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கால்வாய் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி (33) என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் செய்துங்கநல்லூர் கால்வாய், சுடலை கோவில் தெருவை சேர்ந்த இசக்கிபாண்டி (50), ஆறுமுகம் (43), அர்ஜூனன் (44), செய்துங்கநல்லூர் கால்வாய் மாதா கோவில் தெருவை சேர்ந்த செல்வம் (27), ஸ்ரீவைகுண்டம் பத்மநாபமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்களான அங்கப்பன் (53) மற்றும் தேவராஜ் (21) ஆகிய 6 பேரையும் செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
இந்த கொலை வழக்கில் கைதான இசக்கிபாண்டி, ஆறுமுகம், அர்ஜுனன், செல்வம், அங்கப்பன் மற்றும் தேவராஜ் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மநாபபிள்ளை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளிடம் அறிக்கை தாக்கல் செய்தார். காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியருக்கு காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார்.
அதன் பேரில், கொலை வழக்கில் கைதான செய்துங்கநல்லூர் கால்வாய் சுடலைக்கோவில் தெருவை சேர்ந்த இசக்கிபாண்டி, ஆறுமுகம், அர்ஜுனன், செய்துங்கநல்லூர் கால்வாய் மாதா கோவில் தெருவை சேர்ந்த செல்வம், ஸ்ரீவைகுண்டம் பத்மநாபமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்களான அங்கப்பன் மற்றும் தேவராஜ் ஆகிய 6 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார்.
இதைத்தொடரந்து, ஆட்சியரின் உத்தரவின் பேரில் செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மநாபபிள்ளை 6 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார். மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 13 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 8 பேர் உட்பட 112 எதிரிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என மாவட்டக் காவல் துறை அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu