காதல் தம்பதி கொலையில் கைதான 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

காதல் தம்பதி கொலையில் கைதான 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
X
தூத்துக்குடியில் காதல் தம்பதியை கொலை செய்த வழக்கில் கைதான 5 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி முருகேசன் நகரில் கடந்த 02.11.2023 அன்று வசந்தகுமார் மகன் மாரிசெல்வம் (23) மற்றும் அவரது மனைவி கார்த்திகா (21) ஆகிய இருவரும் வீடுபுகுந்து அரிவாளால் தாக்கி கொலை செய்யப்பட்டனர். காதலித்து திருமணம் செய்த மூன்றாவது நாளில் இந்த கொலை சம்பவம் நிகழ்ந்தது.

இந்த வழக்கில் தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியைச் சேர்ந்தவர்களான வாசுதேவன் மகன் பரத் விக்னேஷ்குமார் (25), சண்முகம் மகன் முத்துராமலிங்கம் (47), தூத்துக்குடி கே.வி.கே நகர் பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் இசக்கிராஜா (23), ஏரல் சேதுக்குவாய்த்தான் பகுதியைச் சேர்ந்த அங்குதாஸ் மகன் கருப்பசாமி (24), தூத்துக்குடி சங்கர் காலனி பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் ராஜபாண்டி (27) மற்றும் சிலரை சிப்காட் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் கைதான பரத் விக்னேஷ்குமார், முத்துராமலிங்கம், இசக்கிராஜா, கருப்பசாமி மற்றும் ராஜபாண்டி ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.

காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். இதையெடுத்து, மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவின்பேரில், காதல் தம்பதி கொலை வழக்கில் கைதான பரத் விக்னேஷ்குமார், முத்துராமலிங்கம், இசக்கிராஜா, கருப்பசாமி, ராஜபாண்டி ஆகிய 5 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்.

மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 14 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 30 பேர் உட்பட 169 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
ai solutions for small business