அரசு பள்ளியில் அத்துமீறி நுழைந்து இருக்கைகளை சேதப்படுத்திய 5 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் காலாண்டு விடுமுறை முடிந்து நேற்று பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. அப்போது, பள்ளிக்குள் சென்று பார்த்தபோது, அங்கு அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அத்துமீறி பள்ளியின் சுற்றுச்சுவர் ஏறி குதித்து பூட்டப்பட்டிருந்த பள்ளி வகுப்பறையை உடைத்து அந்த வகுப்பறையினுள் மது அருந்தியும், புகைபிடித்தும், வகுப்பறையினுள் இருந்த பெஞ்ச் மற்றும் டேபிள்களை உடைத்தும் மாணவர்களுக்கு அரசினால் வழங்கப்பட்ட விலையில்லா புத்தகங்களைக் கிழித்தும், தளத்தை உடைத்தும் பொது சொத்துக்களுக்கு சேதப்படுத்தி இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரான மோகன் என்பவர் அளித்த புகாரின் பேரில் முறப்பநாடு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் உத்தரவின்படி, முறப்பநாடு காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையே, வல்லநாடு பகுதியை சேர்ந்தவர்களான தம்பான் மகன் சிந்தாமணி (21), கோமு மகன் உத்தண்டராமன் (24), மாயாண்டி மகன் மாரியப்பன் (22), மாரிமுத்து மகன் பேச்சிமுத்து (23) மற்றும் இசக்கிமுத்து என்ற முத்து மகன் இசக்கிகணேஷ் (22) ஆகியோர் பள்ளியில் அத்து மீறி நுழைந்து அங்கு இருந்த பொது சொத்துக்களை சேதப்படுத்தியது தெரியவந்தது.
இதையெடுத்து, சிந்தாமணி, உத்தண்டராமன், மாரியப்பன், பேச்சிமுத்து மற்றும் இசக்கி கணேஷ் ஆகிய 5 பேரையும் போலீசார் உடனடியாக கைது செய்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து முறப்பநாடு காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu