தூத்துக்குடியில் 400 பவுன் நகைகள் மோசடி: பெண் உள்பட இருவர் கைது
தூத்துக்குடியில் 400 பவுன் நகைகள் மோசடி செய்த இருவர் கைது (கோப்பு படம்)
தூத்துக்குடி முத்தையாபுரம் எம். சவேரியார்புரம் பகுதியை சேர்ந்தவர் ராஜரீகம் (54). இவரிடம், அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரது மனைவி சுப்புலெட்சுமி என்கிற கவிதா (வயது 31) என்பவர் தான் செபத்தையாபுரம் பகுதியில் ஒரு தனியார் கிளப்பில் நிர்வாகியாக இருப்பதாகவும், செழிய நங்கை என்ற பெயரில் மகளிர் குழுவை நிர்வகித்து வருவதாகவும் கூறி அறிமுகமாகி உள்ளார்.
மேலும், தனக்கு பல அரசியல் பிரமுகர்களையும், உச்சநீதிமன்ற நீதிபதிகளையும் தெரியும் என்று கூறி, ராஜரீகத்திடம் தனியார் கிளப்பிற்கு வெளிநாட்டில் இருந்து பணம் வரவிருப்பதாகவும், அதற்கு கிளப் வங்கி கணக்கில் அதிக அளவில் தங்க நகைகள் மற்றும் டெபாசிட் தொகைகள் இருந்தால்தான் நிதி வரும் என்றும் கூறி உள்ளார்.
மேலும், செழிய நங்கை குழுவிற்கு நிதி அளித்தால் தூத்துக்குடி ஏர்போர்ட் அருகில் மனை தருவாகவும் ஆசை வார்த்தை கூறி உள்ளார். மேலும் 10 பவுன் தங்க நகைகள் கொடுத்தால் 30 நாட்களுக்குள் ஒரு பவுன் கூடுதலாக தருவதாகவும், ரூபாய் 1 லட்சம் பணம் கொடுத்தால் 30 நாட்களுக்குள் ரூபாய் 10,000 கூடுதலாக தருவதாகவும் ஆசைவார்த்தைகளை கூறினாராம்.
இதனால், சுப்புலெட்சுமி என்கிற கவிதா மீது நம்பிக்கை ஏற்பட்டு அவரிடம் ராஜரீகம் பதிமூன்றரை பவுன் தங்க நகைகளை கொடுத்து உள்ளார். அதன்பின்பு நகைகளை 30 நாட்களுக்குள் திருப்பி தருவதாக சொன்ன சுப்புலெட்சுமி என்கிற கவிதா 3 மாதங்களாகியும் திருப்பி தராமல் ராஜரீகத்தை ஏமாற்றிவிட்டு தலைமறைவாகி உள்ளார்.
இதுகுறித்து தான் ஏமாற்றப்பட்டதையறிந்த மேற்படி ராஜரீகம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். மாவட்ட குற்ற பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் அந்தோணியம்மாள் தலைமையிலான போலிசார் விசாரணை மேற்கொண்டனர்.
கைது செய்யப்பட்ட வேலவன்.
இந்த நிலையில், வழக்கில் தேடப்பட்டு வந்த சுப்புலெட்சுமி என்கிற கவிதா மற்றும் அவரிடம் இருந்து மோசடியாக பெற்ற தங்க நகைகளை தனியார் நிதிநிறுவனத்தில் அடகு வைக்க உடந்தையாக இருந்த அந்த நிதிநிறுவனத்தின் மேலாளரான தூத்துக்குடி சிறுதொண்டநல்லூர், கோட்டைக்காடு பகுதியை சேர்ந்த வேலவன் (38) ஆகிய இருவரையும் குற்றப் பிரிவு போலீசார் இன்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சுப்புலெட்சுமி.
கைது செய்யப்பட்ட சுப்புலெட்சுமி என்கிற கவிதா என்பவர் முத்தையாபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் பலரை ஏமாற்றி 50 லட்சமும், 400 பவுன் தங்க நகைகளையும் மோசடி செய்து விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu