விஏஓ கொலை வழக்கில் கைதானவர்கள் உள்ளிட்ட 4 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

விஏஓ கொலை வழக்கில் கைதானவர்கள் உள்ளிட்ட 4 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
X

பைல் படம்

கிராம நிர்வாக அலுவலர் கொலை வழக்கில் கைதானவர்கள் உள்ளிட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, புகையிலைப் பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் கொலை வழக்கில் கைதான 2 பேர் உள்ளிட்ட நான்கு பேர் தற்போது குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த லூர்து பிரான்சிஸ் கடந்த 25.04.2023 அன்று கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தூத்துக்குடி முறப்பநாடு கலியாவூர் வேதகோவில் தெருவைச் சேர்ந்தவர்களான ராமசுப்பிரமணியன் (41) மற்றும் மாரிமுத்து (31) ஆகியோரை முறப்பநாடு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

கொலை வ்வழக்கில் சம்பந்தப்பட்ட ராமசுப்பிரமணியன் மற்றும் மாரிமுத்து ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் ஜமால் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.

இதேபோல, கடந்த 2021 ஆம் ஆண்டு ஜுலை மாதம் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வைத்து 17 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்து அதை வீடியோ எடுத்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பதிவேற்றம் செய்த வழக்கில் ஆலந்தலை தெற்கு தெருவைச் சேர்ந்தவர்களான ஜெப்ரின் (25) மற்றும் ரெவின்டோ (23) ஆகியோரை திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் கைது செய்தனர்.

இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட ஜெப்ரின் மற்றும் ரெவின்டோ ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கௌரி மனோகரி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.

காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில், கொலை வழக்கில் கைதான தூத்துக்குடி முறப்பநாடு கலியாவூர் வேதகோவில் தெருவைச் சேர்ந்தவர்களான ராமசுப்பிரமணியன், மாரிமுத்து மற்றும் போக்சோ வழக்கில் கைதான ஆலந்தலை தெற்கு தெருவைச் சேர்ந்தவர்களான ஜெப்ரின் மற்றும் ரெவின்டோ ஆகிய நான்கு பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார்.

ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட நான்கு பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்த காவல் ஆய்வாளர்கள் அவர்கள் நான்கு பேரையும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!