தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
X
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, புகையிலைப் பொருட்கள், போதைப் பொருட்கள் கடத்தல் போன்ற வழக்குகளில் கைது செய்யப்படுவோர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பாலாஜி சரவணன் பொறுப்பேற்ற பிறகு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கொலை வழக்கில் தொடர்புடைய நான்கு பேர் ஒரே நாளில் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 16.06.2023 அன்று சாத்தான்குளம் செட்டியார் கிழக்கு தெருவைச் சேர்ந்த சிவசூர்யா (26) என்பவர் குடும்ப பிரச்னை காரணமாக கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்குப் பதிந்த சாத்தான்குளம் போலீசார் சிவசூர்யா கொலை தொடர்பாக அவரது உறவினரான சாத்தான்குளம் வடக்கு ரத வீதியை சேர்ந்த வெங்கடேஷ் (28) மற்றும் வெங்கடேஷின் நண்பர்களான தெற்கு ரத வீதியைச் சேர்ந்த முத்துகண், வடக்கு ரத வீதியைச் சேர்ந்த நாராயணன் (25) ஆகியோரை கைது செய்தனர்.

கொலை வழக்கில் கைதான வெங்கடேஷ், முத்துகண் மற்றும் நாராயணன் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் முத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.

இதேபோல, கடந்த 18.06.2023 அன்று தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டிஎம்பி காலனி பகுதியில் வைத்து தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியைச் சேர்ந்த கணேசன் (17) என்பவர் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்குப் பதிந்த தென்பாகம் போலீசார் டிஎம்பி காலனி பகுதியைச் சேர்ந்த சுடலைமணி (39) என்பவரை கைது செய்தனர். கைதான சுடலைமணி மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.

காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார்.

அதன் பேரில், கொலை வழக்கில் கைதான வெங்கடேஷ், முத்துகண், நாராயணன் மற்றும் சுடலைமணி ஆகிய நான்கு பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் நான்கு பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட 6 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் உட்பட 86 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
வருச கணக்கில் குழந்தை இல்லையா...? இந்த பழத்தை சாப்பிட்டு பாருங்க...! அவ்ளோ பயன்...!