தூத்துக்குடி, கோவில்பட்டி பகுதியில் 3900 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்; 2 பேர் கைது

தூத்துக்குடி, கோவில்பட்டி பகுதியில் 3900 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்; 2 பேர் கைது
X

தூத்துக்குடியில் ரேஷன் அரிசி கடத்தியதாக கைது செய்யப்பட்ட காந்திசங்கர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கேரளா மாநிலத்துக்கு கடத்தப்பட இருந்த 3900 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் இரண்டு பேரை கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கும், கேரளா மாநிலத்துக்கும் ரேஷன் அரிசி கடத்தப்படும் சம்பவம் அதிகரித்துள்ளது. இதனால், மாவட்டம் முழுவதும் ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதா? என போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசார் தூத்துக்குடி புதியம்புத்தூர் விலக்கு அருகே நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக சென்ற ஒரு ஆம்னி வேனை சோதனை செய்ததில் அதில் 900 கிலோ ரேஷன் அரிசியை நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரு கோழிப் பண்ணைக்கு கடத்திச் செல்ல இருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக, தூத்துக்குடி பிஎன்டி காலனி பகுதியை சேர்ந்த காந்தி சங்கர் என்பவரை கைது செய்து 900 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆம்னி வேனை பறிமுதல் செய்தனர்.

இதேபோன்று, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சவாலாப்பேரி பகுதியில் ஒரு தோட்டத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு கேரளாவிற்கு கடத்த இருப்பதாக குடிமை பொருள் வழங்கல் துறை குற்றப்புலனாய்வுத் துறை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்தத் தோட்டத்திற்கு சென்று சோதனை செய்தனர்.

சேதனையின்போது, அங்கு கேரளாவுக்கு கடத்த இருந்த 3000 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் வெள்ளாளன் கோட்டையைச் சேர்ந்த உச்சிமாகாளி என்பவரை போலீசார் கைது செய்து ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர். இந்த ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக தலைமறைவாக உள்ள அஜித், முருகன், ஈஸ்வரன் ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Next Story
ai in future agriculture