தூத்துக்குடியில் 3 ஆயிரம் போலீசார் குவிப்பு; கடற்கரை பூங்காவில் பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு

தூத்துக்குடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக பொதுமக்கள் சென்ற நிலையில் கவலரம் வெடித்தது. தொடர்ந்து, காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 15 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் .இந்த சம்பவத்தின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் நாளை கடைபிடிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு, தூத்துக்குடியில் மாநகரப் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவுப்படி தூத்துக்குடி மாநகரப் பகுதி முழுவதும் மதுரை , நெல்லை, கன்னியாகுமரி , விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்த 3000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, தூத்துக்குடி முத்து நகர் கடற்கரை பூங்காவில் பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. துப்பாக்கி சூடு சம்பவத்தின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள முத்துநகர் பூங்காவில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக வழக்கறிஞர் ஹரி ராகவன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அனுமதி கேட்டு இருந்தார். மாவட்ட காவல் துறை அந்த நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்ததுடன் மக்கள் அஞ்சலி செலுத்துவது தொடர்பாக முத்துநகர் கடற்கரையில் கூட வேண்டாம் என்றும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் முத்துநகர் கடற்கரையில் சட்டவிரோதமாக கூடுபவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து இன்று காலை 9 மணி முதல் முத்துநகர் கடற்கரை பூங்கா மற்றும் நேரு பூங்கா அடைக்கப்பட்டு பொதுமக்கள் யாரும் உள்ளே செல்லமால் இருக்கும் வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. முத்துநகர் கடற்கரை பூங்கா முன்பு டிஎஸ்பி தலைமையில் 80-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்த முத்து நகர் கடற்கரை பூங்காவில் தடை விதிக்கப்பட்டு போலீஸ் குவிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu