தூத்துக்குடியில் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் டிஎஸ்பி.,க்கு 2 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடி துணை காவல் கண்காணிப்பாளராக இருந்த ஜெயக்குமார். (கோப்பு படம்).
மதுரையை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை தூத்துக்குடி ஊரக கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். அப்போது, புதுக்கோட்டை தேரி ரோட்டை சேர்ந்த கிருபாகரன் சாம் என்பவர் வெளிநாட்டில் வசித்து வந்தார். அவருக்கு சொந்தமான நிலம் புதுக்கோட்டையில் உள்ளது. அந்த நிலத்தை பராமரிப்பதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, கிருபாகரன் சாம் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் புதுக்கோட்டை போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் விசாரித்தார். அப்போது, வழக்கில் இருந்து விடுவிக்க கிருபாகரன் சாம் என்பவரிடம் ரூ. 3 லட்சம் கேட்டு உள்ளார். ஆனால் கிருபாகரன் சாம் பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். அதன்பிறகு முதல் கட்டமாக ரூ. 50 ஆயிரம் வழங்குமாறு கேட்டு உள்ளார். இதனால் கிருபாகரன் சாம் தூத்துக்குடி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
இதனை தொடர்ந்து கடந்த 16.12.2011 அன்று தூத்துக்குடி ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு முகாம் அலுவலகத்தில் வைத்து கிருபாகரன் சாம், ரூ. 50 ஆயிரத்தை துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் வழங்கினார். அப்போது மறைந்து இருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் விரைந்து சென்று ஜெயக்குமாரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செல்வக்குமார் குற்றம் சாட்டப்பட்ட ஜெயக்குமாருக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞர் ஜென்சி ஆஜரானார். தற்போது ஜெயக்குமார் பணி ஓய்வு பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu