தூத்துக்குடி மாவட்டத்தில் செப்.25 மாலை முதல் 27 காலை வரை 144 தடை உத்தரவு
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ். (கோப்பு படம்).
வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினம் செப்டம்பர் 26 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், அம்மன்புரம் கிராமத்தில் 26.09.2023 அன்று அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை நிறுவனம் சார்பில் மறைந்த வெங்கடேஷ் பண்ணையாரின் 20 ஆவது நினைவு நாள் கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, அசம்பாவிதங்கள் ஏதுமின்றி மேற்படி விழா அமைதியாக நடைபெறும் பொருட்டும், சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரித்திடவும், 25.09.2023 மாலை 6.00 மணி முதல் 27.09.2023 காலை 06.00 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
அன்றையதினம் அம்மன்புரம் பகுதிகளிலும் மற்றும் பிற பகுதிகளில் இருந்தும் விழாவில் கலந்து கொள்ளும் பொருட்டு வருகை தரும் பொதுமக்கள் அனைவரும் வாள், கத்தி, கம்பு வேல்கம்பு, குச்சி, கற்கள் மற்றும் இதர அபாயகரமான ஆட்சேபகரமான ஆயுதங்கள் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாகவும், விழாவிற்கு கலந்து கொள்ள பொதுமக்கள் அழைத்து வரப்படுவதற்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-இன் கீழ் தூத்துக்குடி மாவட்டம் முழுவதற்கும் தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தத் தடை உத்தரவு பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலாவிற்காக வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் தினசரி செல்லும் ஆம்னி பேருந்துகள் ஆகியவற்றிற்கு பொருந்தாது. வெங்கடேஷ் பண்ணையாரின் நினைவு தினமானது அமைதியான முறையில் அனுசரிக்க மாவட்ட காவல் துறையின் சார்பில் விரிவான பாதுகாப்பு எற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அன்றையதினம் வேறு ஏதேனும் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்தவிருப்பின் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை அணுகி அனுமதி பெற்றுக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், இந்த தடை உத்தரவு திருமணம் மற்றும் இறுதி சடங்கு ஊர்வலங்களுக்குப் பொருந்தாது.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu