எல்லை தாண்டிய தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் 12 பேர் மாலத்தீவில் கைது

எல்லை தாண்டிய தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் 12 பேர் மாலத்தீவில் கைது
X

மாலத்தீவு கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள்.

மாலத்தீவு கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தை சேர்ந்த 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, திருச்செந்தூர், தருவைக்குளம், ஆலந்தலை, பெரியதாழை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர்.

இதில், தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் தினமும் அதிகாலை 5 மணிக்கு கடலுக்குச் சென்றுவிட்டு இரவு 9 மணிக்குகள் கரை திரும்ப வேண்டும் என்பது அரசின் அறிவிப்பு. மற்ற பகுதி விசைப்படகு மீனவர்கள் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் ஆழ்கடல் பகுதி வரை சென்று பல நாட்கள் கடலில் தங்கி மீன்பிடிப்பது வழக்கம்.

அந்த வகையில், தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் கடற்கரை கிராமத்தில் இருந்து கடந்த ஒன்றாம் தேதி மைக்கேல் பாக்கியராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் பரலோக திரவியம், அந்தோணி கிறிஸ்டோபர், உதயகுமார், மைக்கேல் ராஜா, மாதேஷ் குமார், ஆதிநாராயணன், மணி, சக்தி செல்வராஜ் விக்னேஷ், உள்ளிட்ட 12 மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு சென்றுள்ளனர்.

அவர்கள் ஆழ் கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டு திரும்பிக் கொண்டிருக்கும்போது கடந்த 23 ஆம் தேதி மாலத்தீவு கடல் பகுதி வழியாக வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது மாலத்தீவு கடல் பகுதியின் உள்ளே அத்துமீறி நுழைந்துள்ளதாக கூறி 12 மீனவர்களை மாலத்தீவு கடலோர பாதுகாப்பு படையினர் கைது செய்தவுடன் படகையும் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக மாலத்தீவு கடலோர காவல் படையினர் மூலம் மீனவர்கள் நேற்று இரவு தருவைகுளம் மீனவ கிராமத்திற்கு தகவல் அளித்தனர். இதைத் தொடர்ந்து மாலத்தீவு கடலோர காவல் படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசைப்படகு உரிமையாளர் சங்கம் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கடலோர காவல் நிலைய போலீசார் மற்றும் தருவைகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story