நவதிருப்பதி கோவில்களில் நாளை வைகுண்ட ஏகாதசி விழா : பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு
வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நவதிருப்பதி கோவில்களில் நாளை பக்தர்கள் கட்டுப்பாடுகளுடன் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நவதிருப்பதி கோவில்களில் ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாதசி விழா வெகு விமரிசையாக நடைபெறும். வைகுண்ட ஏகாதசி விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. அதை முன்னிட்டு ஒன்பது கோவில்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய வசதியாக தடுப்பு கம்புகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அரசு விதிகளின்படி தரிசனம் செய்ய சில கட்டுப்பாடுகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில், நத்தம் எம்இடர்கடிவான், திருப்புளியங்குடி காய்சின வேந்தன் இரட்டை திருப்பதி தேவர்பிரான், செந்தாமரை கண்ணன், பெருங்குளம் மாயக்கூத்தர், தென் திருப்பேரை நிகரில் முகில் வண்ணன், திருக்கோளூர் நிக்சோபவித்தன், ஆழ்வார்திருநகரி பொலிந்து நின்றபிரான் ஆகிய உற்சவ பெருமாள் சயனத் திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
இந்த கோவில்களில் பக்தர்கள் முககவசம் அணிந்து ஒருவருக்கு ஒருவர் இடைவெளிவிட்டு தரிசனம் செய்ய வேண்டும். அர்ச்சனை செய்யவும் நெய்விளக்கு ஏற்றவும் தடை செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக குடிதண்ணீர் வசதி, கழிப்பிட வசதி, மருத்துவ வசதி ஆகியவை கோவில் நிர்வாக அதிகாரிகள், பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறையினர் மூலம் செய்யப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu